tamilnadu

img

கொடுமுடி தாலுகா செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல்.... குற்றவாளிகளை தாமதமின்றி கைது செய்ய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்...

சென்னை:
விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா செயலாளரும் கொடுமுடி மொடக்குறிச்சி தாலுகாவின் மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளருமான கே.பி.கனகவேல் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் முன்னாள் எம்எல்ஏ, பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் கொடுமுடி தாலுகா செயலாளராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மொடக்குறிச்சி கொடுமுடி தாலுகா செயலாளராகவும் - தூய்மைக் காவலர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட அமைப்பாளராகவும் மக்கள் பணியாற்றி வருபவர் கே.பி.கனகவேல், அந்த பகுதியின் விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் கோரிக்கைக்காக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருபவர்.நூறு நாள் வேலை, வீட்டுமனைப்பட்டா மற்றும் மக்களின் அத்தியாவசிய கோரிக்கைகளுக்காக மக்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டு, நூற்றுக்கணக்கான மக்களுக்கு வேலையும் - மனைப்பட்டாவும் - அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிர்வாக கோளாறுகள் - முறைகேடுகளுக்கு எதிராக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்கள் பணியாற்றி வருகிறார். அவரின்மக்கள் பணியை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் கடந்த பிப்ரவரி 22 அன்று இரவு, கனகவேல் இயக்கப்பணி முடிந்து திரும்பும்போது பாட்டில், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் வழிமறித்து கொடூரமாக கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்து ஈரோடு
மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். மக்கள்ஊழியர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய கயவர்களையும் உடந்தையாக இருந்தவர்களையும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து விரைவாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;