tamilnadu

img

பால் தயிர் ஜிஎஸ்டி உயர்வு: No Comments - நடிகர் ரஜினிகாந்த் 

சென்னை ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற நடிகர் ரஜினிகாந்த், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு அவரது இல்லத்தின் வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ஆளுநருடனான சந்திப்பு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழக ஆளுநருடன் 30 நிமிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஆளுநருடன் அரசியல் பற்றி பேசினேன். ஆனால் அதைப் பற்றி இப்போது சொல்ல முடியாது என்றார். 
மீண்டும் அரசியலுக்கு வரப்போகிறீர்களா? என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று நடிகர் ரஜினி பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய ரஜினி, காஷ்மீரில் பிறந்து, அதிக காலம் வட இந்தியாவில் வளர்ந்தவர் ஆளுநர் ரவி. தற்போது தமிழகத்தில் இருக்கும் ஆன்மிக உணர்வு அவரை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
தமிழர்களின் கடின உழைப்பு, நேர்மை போன்றவை மிகவும் பிடித்திருப்பதாக அவர் கூறினார். தமிழகத்தின் நன்மைக்காக நலனுக்காக தான் என்ன செய்யவும் தயார் என்று அவர் என்னிடம் கூறினார் என்று ரஜினி குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற தேர்தல் பற்றி விவாதித்தீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது பற்றி சொல்ல முடியாது என்று ரஜினி பதிலளித்தார்.
மேலும் பால் தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ரஜினி காந்த் No Comments என்று தெரிவித்துள்ளார். 
இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி உள்ளது. 
 

;