tamilnadu

img

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுக... முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை:
கொரோனா தடுப்பு தொடர்பாக தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகள் குறித்து தமிழக முதல்வருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜூலை 2 வியாழனன்று கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

பரிசோதனை
அரசு மற்றும் தனியார் பரிசோதனை நிலையங்களில் கொரோனா  தொற்று பரிசோதனையை தமிழக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அரசு பரிசோதனை நிலையங்களில் அறிகுறிகள் இல்லாமல் வருவோருக்கு பரிசோதனை மறுக்கப்படுகிறது.  தொற்று குறித்த விவரத்தின் அடிப்படையில், பாதிப்புக்குள்ளானவர்கள் 85 சதவிகிதம் பேர் எவ்வித அறிகுறிகளும் இல்லாதவர்கள் என்கிறபோது, அறிகுறிகள் இல்லாதவர்களை பரிசோதிக்க மாட்டோம் என்று சொல்வது நியாயமல்ல. பரிசோதனை எண்ணிக்கையை  கூடுதலாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல மட்டங்களில் இருந்தும் அழுத்தம் வந்தபின்னும், மே மாதம் 7ம் தேதி ஒரே நாளில்   14 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது போல, பின்னர் தற்போது ஏறத்தாழ இரண்டு மாதங்கள் ஆகியும் அந்த அளவிற்கு அதிகரிக்கப்படவில்லை. தனியார் பரிசோதனை நிலையங்களில் பரிசோதனைக்கான கட்டணத்தை குறைப்பதன் மூலம் பரிசோதனை எண்ணிக்கையை உயர்த்த முடியும். மகாராஷ்டிரா மாநிலம் ரூ. 2,300/- என்றும், ஆந்திரப் பிரதேசம்ரூ. 2,200/- என்றும், தில்லி ரூ. 2,000/- என்றும் குறைத்து நிர்ணயிக்கின்றன. இப்போது ஒரு பரிசோதனையை ரூ. 1,000/- என்ற அளவில் செய்துவிட முடியும் என்றும் பலரும் குறிப்பிடுகிறார்கள். இதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு பரிசோதனை கட்டணத்தை ரூ. 1,000/- என்ற அளவிற்கு குறைக்க வேண்டும் என்றும், அதை காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம். இப்படி செய்வதன் மூலம், விரும்பினால் தனியார் மருத்துவமனைகளில் பரிசோதித்து கொள்ள முடியும். 

தனியார் மருத்துவமனைகளில்...
அடுத்ததாக, தனியார் மருத்துவமனைகளில் 25 சதவிகிதம் பேரை முதலமைச்சரின் ஒருங்கிணைந்த குடும்ப பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அனுமதித்து சிகிச்சை அளிக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இரண்டாவதாக, பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சையைத்தாண்டி அறை வாடகையாக ஒரு நாளைக்கு ரூ. 20,000/-த்திலிருந்து, ரூ. 40,000/- வரை பெறுவதாக செய்திகள் வருகின்றன. தமிழகம் இன்று சந்தித்துக்கொண்டு இருக்கக்கூடிய நெருக்கடிக்கு ஏற்றார்போல இது இல்லை. ஒரு பேரிடர் காலத்தில் கூட தனியார் மருத்துவமனைகள் தங்கள் லாபத்தை குறைத்துக் கொண்டு சேவை செய்ய முன்வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பது ஒன்றும் தவறல்ல. எனவே 100 சதவிகித இடங்களையும் அரசு கையகப்படுத்த வேண்டும் என்கிற எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம்.அதேசமயம், தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் உள்ள இடங்களை நிரப்ப மறுப்பது, நோயாளிகளை அலைக்கழிப்பது ஆகியவற்றையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இதற்கு ஒற்றைச்சாளர முறையில் அனைத்து தனியார் மருத்துவமனை இடங்களையும்  அரசு  கையகப்படுத்தி, ஒரே முனையிலிருந்து  மருத்துவமனை படுக்கைகளை நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வது தான்  பொருத்தமாக  இருக்கும்.

காப்பீட்டுத் திட்டம்
அதேபோன்று, காப்பீட்டு திட்டத்தின் கீழ் வருபவர்களுக்கு நேரடியாக எந்த மருத்துவமனையும் பணம் வசூலிக்க கூடாது. சிகிச்சைக்கான கட்டணத்தை காப்பீட்டின் மூலம் அரசாங்கமே ஏற்பாடு செய்து தரும் என்பதை அரசாணையாக வெளியிட்டு, அதை கறாராக அமல்படுத்த முயற்சிக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இது தமிழக அரசு குறிப்பிட்டுள்ள தனியார் மருத்துவமனை இடங்களில் சாதாரண ஏழை, எளிய மக்களும் சிகிச்சை பெறுவது என்பது சாத்தியமாக இருக்கும்.
அடுத்ததாக, மாநிலத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மதுரை போன்ற இடங்களில் கொரோனா அல்லாத காய்ச்சல்களும், அதுதொடர்பான நோய்களும் ஏற்படுவதை காணமுடிகிறது. எனவே தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் இதர நோய்களுக்கான சிகிச்சையை தொடர்வது என்பதை உரிய பாதுகாப்புடன் உத்தரவாதப்படுத்த வேண்டும். 

தனித்தனியாக தங்க வைப்பீர்!
கொரோனா பரிசோதனை செய்து முடிவுக்காக காத்திருக்கும் போது, அவர்களையும், தொற்று இருப்பவர்களையும்  ஒரே இடத்தில் குறைந்தபட்சம் 48 மணி நேரம் வைத்திருக்கும் நடைமுறை பல மாவட்டங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.  தொற்றால் பாதிக்கப்படாத ஒருவருக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த மாதிரியில் அடிப்படையில் தொற்று இல்லை என்று சான்று அளிக்கப்பட்டாலும், இந்த 48 மணி நேரத்தில் தொற்று ஏற்பட்டவர்களுடன் இருந்ததன் காரணமாக, புதிதாக தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, பரிசோதனை செய்யப்பட்ட ஒவ்வொருவரையும் தனித்தனியாக தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் அவசியமாகும்.

பராமரிப்பு அவசியம்
அதேபோன்று, கொரோனா பாதுகாப்பு மையங்களில் ஆரம்பத்தில் இருந்தது போல உணவு, கழிவறைகள் உள்ளிட்ட பராமரிப்பு அம்சங்களில் பலவீனம் ஏற்படுவதாக பல இடங்களில் இருந்தும் செய்திகள் வருகின்றன. உணவு  தரக்குறைவு, நேரம் கடந்து வழங்குவது, மருந்துகள் நேரம் கடந்து வழங்குவது போன்றவை முக்கிய பிரச்சினைகளாக முன்னுக்கு வருகின்றன. இதை சீர்படுத்த வேண்டும். மாவட்ட எல்லைகளில் பிற மாவட்டங்களில் இருந்து வருவோரை பரிசோதிப்பவர்கள் மற்றும் கொரோனா பாதுகாப்பு மையங்களில் பணிபுரிபவர்கள் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை சந்திக்கிறார்கள்.  தொற்று பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை என்பதை கவனத்தில் கொண்டு, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்க கூடிய ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதை உத்தரவாதப்படுத்த வேண்டும். 

அரசு ஊழியர் நிலை
அதேபோன்று அரசு ஊழியர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தாலும் அதை வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பதற்கு, அவர்களுக்கு இழப்பீடு கொடுக்கவேண்டும் என்பதால் தானோ என்கிற ஐயம் எழுகிறது. அதற்கு வலுசேர்க்கும் விதமாகவே பணியில் இறந்தபோன அரசு ஊழியர்களுக்கு, தமிழக அரசு நிதி உதவியை இதுவரை செய்யவில்லை என கருத வேண்டியிருக்கிறது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், மருத்துவமனையிலிருந்து திரும்பியவர்கள், கவனிப்பு மையங்களில் இருந்து அனுப்பப்படுபவர்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு மீண்டவர்கள் என யாராக இருந்தாலும் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் உளவியல் ரீதியான கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அவர்களுக்கு தொலைபேசி மூலமாகவோஅல்லது தினசரி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாகவோ கவுன்சிலிங் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

ஹோமியோ, சித்தா 
ஹோமியோ, சித்தா உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வித பக்கவிளைவுகள் இன்றி அதிகரிக்க முடியும் என்று அந்த துறையை சார்ந்தவர்கள் தொடர்ச்சியாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பரிசீலித்து, இந்த ஆயுஷ் மருந்துகளை பயன்படுத்துவதோடு,  கொரோனா சிகிச்சை மற்றும் பாதுகாப்பு மையங்களில் அனைத்து வகை மருத்துவர்களையும் ஒன்றிணைத்து,  ஒருங்கிணைந்த சிகிச்சைக்கு முயற்சிக்க வேண்டும். மாவட்ட வாரியாக தினசரி எவ்வளவு பரிசோதனைநடத்தப்படுகிறது என்பதை வெளியிட வேண்டுமென மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு நிபுணர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள். அப்படி செய்தால் மட்டுமே தேவைப்படும் இடங்களில் பரிசோதனைகளை அதிகரிப்பதற்கு உதவிகரமாக இருக்கும். இதுவரையிலும் மாநில அரசு இரண்டு முறை மட்டுமே வெளியிட்டிருக்கிறது. எனவே உடனடியாக, மாவட்ட வாரியான பரிசோதனை எண்ணிக்கையை தினமும் வெளியிட வேண்டும். இறந்து போனவர்களில் 239 பேரை அரசு கணக்கில் சேர்க்கவில்லை என்றும், அதைப்பற்றி விசாரித்து உண்மையைச்சொல்வதற்காக ஒரு குழு அமைத்திருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்தது. ஆனால், மூன்று வாரங்கள் ஆன நிலையில் இன்று வரை அரசாங்கம்அதுபற்றிய உண்மைகளை வெளியிடவில்லை. அதையும் உடனடியாக வெளியிட வேண்டும். பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கான முடிவு பாசிட்டிவாக இருந்தாலும், நெகட்டிவாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர் களுக்கு தெரிவிக்கப்பட வேண்டுமென்றும், பரிசோதனை நடைபெற்று முடிவுகள் அறிவிக்க தேவையற்ற கால தாமதம் செய்வதை தவிர்த்து அடுத்த நாளே பரிசோதனை முடிவை அறிவிக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம்.

அனைத்துக் கட்சி கூட்டம் அவசியம்
ஒரு கடுமையான சூழலை தமிழகம் இன்று எதிர்கொண்டிருக்கிறது. இதற்கு ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய அவசியம் இருக்கிறது. பல்வேறு தரப்பு நிபுணர்கள், அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் இவற்றையெல்லாம் ஒருங்கிணைப்பது மிக, மிகஅவசியமாகும். இப்படி பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆலோசனை களை பெறுவதற்காக தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;