tamilnadu

img

தேர்தல் விதி என்ற பெயரில் தொழிற்சங்கக் கொடிகளைக் கூட வெட்டி வீழ்த்திய ஆணையம் மே தின நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி மறுப்பதா? சிஐடியு கண்டனம்

சென்னை:

தேர்தல் நடத்தை விதிகள் என்ற பெயரில் தொழிற்சங்கங்களின் கொடிமரங்களைக் கூட வெட்டி வீசிய தேர்தல் ஆணையம், தற் போது மே தின கொடியேற்று நிகழ்ச்சிகளுக்குக் கூட அனுமதி மறுப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என இந்திய தொழிற்சங்க மையம்(சிஐடியு) மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகளை காரணம்காட்டி ஆலை வாயில்கள், தொழிலாளர் கூடுமிடங்களில் இருந்ததொழிற்சங்க கொடிமரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. ஆனால் தேர்தல் நடத்தை விதிகளில் தொழிற்சங்கங்களின் கொடிகள் குறித்து வரையறை ஏதும் செய்யப்படாத நிலையில் உள்ளூர் நிர்வாக மும், காவல் துறையினரும் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கொடிமரங்களை அப்புறப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு கொடிமரமும் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரம் வரையிலான மதிப்புடைய இரும்பு கம்பங்களாகும். அப்புறப்படுத்தப்பட்ட கொடிமரங்களை சம்பந்தப்பட்ட தொழிற்சங்கத்திடம் திருப்பி தரும் ஏற்பாடும் தேர்தல் ஆணையத்திடம் இல்லை.

வாக்கு எண்ணிக்கை நாள் வரையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையிலும் உலக தொழிலாளர்களின் உரிமை தினமான மே 1 அன்று தமிழகத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மேதின நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மே தினம் தேசிய விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் உரிமைத்தினத்தில் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் தொழிற்சங்க கொடியேற்றி மேதினத்தை கொண்டாடவுள்ளனர். அன்றைய தினம் தொழிற்சங்கங்கள் சார்பில் தொழிலாளர் பேரணி, பொதுக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

மே தின நிகழ்ச்சிகளுக்கு அனுமதிகோரி உள்ளூர் காவல் துறையினரிடம் முறையாக விண்ணப்பித்தும், தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்படுகிறது.காவல்துறையினர் இத்தகைய நடவடிக்கை கண்டனத்திற்குரியது.

அரசியல், சாதி, மத பேதமற்ற உழைப்பாளிகளின் உரிமை தினம் உலகம் முழுவதும் கொண்டாடும் வேளையில் தமிழ்நாட்டில் மட்டும் காவல்துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தொழிலாளர்களின் உணர்வுகளை அவமதிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.தமிழக காவல்துறை மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.கடந்த காலங்களில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாகவோ, வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன்னதாகவோ மே தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன என்பதை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகை யில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மேதின நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க உரிய உத்தரவினை காவல்துறைக்கு வழங்குமாறு சிஐடியு தமிழ் மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

;