tamilnadu

img

தில்லி இளம் பெண் அதிகாரி படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்.....

சென்னை:
தில்லி இளம் பெண் அதிகாரி படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தலைநகர் தில்லியில், சிவில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிவந்த 21 வயதே ஆன  இளம் பெண் கும்பல் பாலியல் வல்லுறவு  செய்து குரூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். அவரது உடல்பாகங்கள் சிதைக்கப்பட்டு,  50 க்கும் மேற்பட்ட வெட்டுக்காயங்களோடு கண்டறியப்பட்டுள்ளது. இந்த குரூர படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.கொல்லப்பட்ட இளம்பெண் அதிகாரி ஒரு சிறுபான்மை இஸ்லாமியர் என்பதையும் அவரது கொடூரமான கொலையில் காவல்துறையில் பணியாற்றும் ஒருவரும் உடந்தையாக இருந்திருக்கிறார் என்பதையும் அறியும்போது இது ஒரு திட்டமிட்ட வகுப்புவாத வெறியோடு நடத்தப்பட்டகொடூரக் கொலையே என்பதோடு, தில்லி காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாஜக ஒன்றியஅரசின் மோசமான தோல்வியையும் அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

படுகொலை செய்யப்பட்ட பெண் அதிகாரி, மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் லஞ்ச ஊழல் உள்ளிட்ட தவறுகளை தட்டிக் கேட்டதாலும், தவறிழைக்கும் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததாலுமே அவருக்கு இந்த நிலை நேர்ந்திருக்கிறது என்று அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.  இளம் வயது பெண்ணை இழந்து தவிக்கும் பெற்றோரது கண்ணீரையும், தலைநகரில் நடந்துள்ள இத்தகைய அதிர்ச்சிகரமான சம்பவத்தையும் ஒன்றிய உள்துறையோ அல்லது அதற்கு கீழ் இயங்கும் தில்லி காவல்துறையோ துளியும் கண்டுகொள்ளவில்லை என்பதோடு, இந்த கொலை குறித்த வழக்கை பதிவு செய்வதிலும், குற்றவாளிகளை கண்டறிவதிலும் மிகவும் அலட்சியமாகவே நடந்து கொள்கிறது.
உள்துறையின் கட்டுப்பாட்டில் நேரடியாக சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படும் தில்லியில் கடந்த ஜனவரி 2021 முதல் ஜூன் 2021 வரையிலான ஆறு மாதங்களில் மட்டும் பெண்களுக்கு எதிராக 833 பாலியல் வல்லுறவு குற்றங்களும், 1022  இதர வகையான குற்றங்களும் நடைபெற்றுள்ளன. இது கடந்த காலங்களை ஒப்பிடும் போது 43 சதவீதம் அதிகமாகும்.  சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க கண்ணோட்டமும், திட்டமிட்டு வளர்க்கப்படும் வகுப்புவாத வெறியுமே இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கான அடிப்படைகளாகும்.

இந்நிலையில் அரசியல் உள்நோக்கத் தோடும், அரசியல் சமரசங்களுக்கு இடமளிக்காத வகையிலும் இவ்வழக்கை உள்துறையும், தில்லி காவல்துறையும் நேர்மையாக கையாள்வதோடு, வல்லுறவு மற்றும் கொலை  குற்றவாளிகள், அதற்குப் பின்னால் இருந்தவர்கள்என அனைவரும் எவ்வளவு உயர்மட்டத்தில்இருந்தாலும் உடனடியாக கைது செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். நீதிமன்றத்தின் நேரடியான கண்காணிப்பிலான விசாரணையையும் உறுதி செய்திடவேண்டும்.  மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு வலியுறுத்துகிறது. இந்த  படுகொலையை கண்டித்து அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டனக் குரலெழுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

;