tamilnadu

img

மேற்குவங்கத்தில் மம்தா கட்சியினர் வன்முறைத் தாண்டவம்.... மாதர் சங்கம் இன்று கண்டன இயக்கம்.....

சென்னை:
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகளை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்  வன்மையாகக் கண்டிக்கின்றது.  அமைதியை நிலைநாட்ட மாநில அரசு உடனடிநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேற்குவங்க வன்முறையைக் கண்டித்து மே 9 அன்று வீடுகள் தோறும் கண்டன இயக்கம் நடத்த ஜனநாயக மாதர்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

மே 2 ஆம் தேதி ஞாயிறு மாலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை திகிலூட்டும் அளவை எட்டியுள்ளது.   தேர்தலில்  வெற்றிபெற்ற கட்சியான திரிணாமுல் காங்கிரசால் வன்முறை நடவடிக்கைகள் துவக்கப்பட்டன.  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்தவர்களில் யாரெல்லாம் அதிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்களோ அவர்களை பழிவாங்கும் நிகழ்வாகவே இந்த வன்முறைகளைப் பற்றி பிரதான ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.  இத்தகைய வன்முறை இதர பல பகுதியினர் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்டு வருவதை புறக்கணித்துவிட்டு இப்படிப்பட்ட செய்திகளை பிரதானஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.  

இத்தகைய வன்முறை நிகழ்வுகளின் கீழ்க்காணும் உண்மையான அம்சங்கள் குறித்து பிரதானஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன.மேற்கு வங்க மாநில மக்களில் யாரெல்லாம்திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்திருக்கிறார்கள் அல்லது ஆளும் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என  அக்கட்சியினர் சந்தேகம் கொண்டுள்ளனரோ அவர்கள் மீது ஈவிரக்கமின்றி தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன.  இத்தகைய தாக்குதல்கள் சம்யுக்தா மோர்ச்சா என்ற கூட்டணியில் இடம் பெற்றிருந்த சிபிஎம் கட்சி, இதர இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ்மற்றும் ஐஎஸ்எஃப் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் மற்றும் செயல்வீரர்களும் இதில் அடங்கியுள்ளனர். 

மதரீதியாக அணிதிரட்டும் அபாயம் 
மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையின் தாக்கங்கள் குறித்து எந்த கவலையும் கொள்ளாத பாஜக, இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ள முயற்சிக்கிறது.  மேலும், வதந்திகளைப் பரப்புவதோடு, மோதல்களைத் தூண்டி வருகிறது.  இதன்விளைவாக இரு தரப்பிலும் மதரீதியாக அணிதிரட்டுதல் என்ற அபாயம் ஏற்பட்டு வருகிறது. மேற்குவங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பின்பு அரங்கேறி வரும் வன்முறைகளில் ஏற்கனவே 11 பேர் உயிரிழந்துள்ளனர்.   இந்த மோதல்களில் உயிரிழந்த முதல் பெண்மணி கிழக்கு பர்துவானின் ஜமால்பூரில் உள்ள நபாகிராம் கிராமத்தைச் சார்ந்த காகோலி க்ஷேத்ரபால் என்பவராவார்.  இவர் சிபிஎம் கட்சியின், மாதர் சங்கத்தின் செயல்வீரர் ஆவார்.    கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவைப்படும் மிக அவசியமான சேவைகளை தெருக்களிலே இறங்கி செய்து வருகின்றசெந்தொண்டர்கள் உட்பட எண்ணற்ற இடதுசாரி செயல்வீரர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர்.  கட்சி ஊழியர்களின் வீடுகள், கட்சி மற்றும் தொழிற்சங்க அலுவலகங்கள் சூறையாடப்படுகின்றன அல்லது தீயிட்டு கொளுத்தப்படுகின்றன.இத்தகைய நிகழ்வுகள் குறித்தெல்லாம் பிரதான ஊடகங்கள் பெரும்பாலும் மௌனத்தையே கடைப்பிடிக்கின்றன. 

மம்தாவுக்கு மின்னஞ்சல்  அனுப்பும் இயக்கம்
மக்களின் வாழ்வையும், அவர்களது உடமைகளையும் அழித்திடுவதோடு, இத்தகைய பயங்கரமான தாக்குதல்கள் ஜனநாயகத்திற்கும், அம்மாநில மக்களிடையேயான நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக மாறி வருகின்றன. இதனை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.  கீழ்க்காணும் கோரிக்கைகளை முன்வைத்து மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வருக்கு மே 8,9 ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதிலுமிருந்து  மின்னஞ்சல்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

கட்டவிழ்த்து விடப்பட்டு வரும் வன்முறைகளை தடுத்து நிறுத்துவதோடு, அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை அம்மாநில அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பளிப்பதோடு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மேற்குவங்கத்தில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அமைதியை சீர்குலைத்திட முயற்சி செய்யும் சமூக விரோதிகளுக்கு எதிராக அனைத்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் பங்கேற்க வேண்டும்.

மேலும் மே 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு  ஜனநாயக மாதர் சங்க உறுப்பினர்கள் தங்கள் வீட்டின் முன்பு இக்கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை வைத்து கண்டனங்களை பதிவு செய்து அந்த போராட்ட  புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என்று   ஜனநாயக  மாதர் சங்க தமிழ்மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.மாதர் சங்க உறுப்பினர்கள் மட்டுமல்லாது அனைத்து ஜனநாயக அமைப்புகளும்,மனித உரிமை அமைப்புகளும்,பெண்ணுரிமை அமைப்புகளும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று  மாதர் சங்கம் அறைகூவி அழைக்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-மெயில் அனுப்ப வேண்டிய முகவரி: cm@w.gov.in

;