ஆன்லைன் மூலம் பட்டாசு விற்கும் இணைய தளங்களை முடக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைனில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷேக் அப்துல்லா என்பவர் கடந்த ஆண்டு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆன்லைனில் பட்டாசு விற்க தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை முறையாக நிறைவேற்றப்படவில்லை என ஷேக் அப்துல்லா மனு ஒன்றை மீண்டும் தாக்கல் செய்தார். அந்த மனுவில், உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆன்லைன் மூலம் பட்டாசு விற்கும் இணைய தளங்களை முடக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்தால் தண்டனை விதிக்கப்படும் என விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.