tamilnadu

img

அடிப்படை வசதிகள் இல்லாத லாரி ஓட்டுநர்களின் ஓய்வறைகள்

செங்கல்பட்டு, டிச. 28- படாளத்தில் அமைந்துள்ள லாரி ஓட்டுநர்களின் ஓய்வறையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் சரக்கு லாரிகளுடன் பயணம் செய்யும் ஓட்டுநர்களும், கிளீனர்களும் அவதிக்குள்ளாகின்றனர்.  செங்கல்பட்டு  அடுத்த  படாளம் பகுதியில்  சென்னையில்  இருந்தும்,  தென் மாவட்டங்களில்  இருந்தும்  சரக்குகளை  எடுத்துச் செல்லும்  லாரி ஓட்டுநர்கள் நீண்ட நேரம் பயணம் செய்யும் போது ஏற்படும் களைப்பு போக்கிக்கொள்ள  நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நிரந்தர ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது இதற்கான கட்டணத்தையும் சுங்கச்சாவடிகளில் சேர்த்தே வசூல் செய்யப்படுகின்றது. இந்த அறைகள் தற்போது லாரி ஓட்டுநர்கள் பயன்படுத்த முடியாத நிலையில்  உள்ளது. அதில் உள்ள கழிப்பறை பூட்டப்பட்டுள்ளது. ஓய்வறையில்  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. நீண்ட தூரம் பயணம் செய்து வரும் லாரி  ஓட்டுநர்கள் தரையில் படுத்துக் கூட உறங்க முடியாத அளவுக்குக் குப்பை கூளங்கள் நிறைந்துள்ளன.

ஓய்வறை சுத்தம் செய்யப்படாமல் காணப்படுகிறது. கழிவறைகள் பூட்டப்பட்டுள்ளதால்  லாரிகளை நிறுத்திவிட்டு, இயற்கை உபாதைகளைப்  போக்க அருகில்  உள்ள திறந்த  வெளியைப்  பயன்படுத்துகின்றனர்,  உணவருந்தவும் செல்லும் ஒட்டுநர்கள் திரும்பி வரும்போது லாரிகளில் உள்ள  பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர். ஓட்டுநர்கள் குளிப்பதற்காக மூன்று தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்ப்டுள்ளது இந்தத்தொட்டிகளைச் சுத்தம் செய்யாமல் நாள்தோறும் தண்ணீர் நிரப்புவதால் தண்ணீர் துர்நாற்றம் வீசிவருகின்றது. மேலும் இந்த பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதால் அருகில் உள்ள கிராமங்களிலிருந்து பலர் இங்கு வந்து மது அருந்திவிட்டு ஓட்டுநர்கள் ஓய்வெடுக்கும் பகுதியை மது அருந்தும் இடமாக மாற்றி வருகின்றனர். இரவு நேரங்களில் லாரியை நிறுத்திவிட்டு உணவருந்தச் சென்று வரும் முன்னர் லாரியில் உள்ள சரக்குகள் மற்றும் லாரி  உபகரணங்களைப்  பலர் திருடிச் செல்வதாகவும் கூறப்படுகின்றது. இதுகுறித்து திருச்சியைச் சார்ந்த லாரி ஒட்டுநர் அரவானிடம் கேட்டபோது நாடு முழுவதும் இருந்து இந்த சாலை வழியாக நாள்தோறும் பல லாரிகள் சரக்குகளை ஏற்றிச் செல்கின்றோம் பல நாட்கள் தொடர்ந்து லாரிகளை ஓட்டுவதால் பகல் நேரத்தில் இதுபோன்ற ஓய்வுகளைப் பயன்படுத்திக் கொள்வோம். மீண்டும் இரவில் லாரிகளை ஓட்டுவோம் ஆனால் எங்களிடம் சுங்கச் சாவடியில் இந்த ஓய்வறைகளுக்கும் சேர்த்துத்தான் பணம் வசூல் செய்கின்றனர். எந்தவித அடிப்படைவசதிகளும் செய்துதருவதில்லை குடிதண்ணீர் கழிப்பறை வசதிகளை செய்து தருவதே இல்லை. ஓய்வெடுக்கும் அறைகளை மது அருந்துபவர்களும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் பயன்படுத்திக் கொள்கின்றனர். நீண்ட தொலைவு லாரி ஓட்டத்திற்குபின் ஓய்வு எடுக்கலாம் என நினைத்தாலும் திருட்டு பயத்திற்காகத் தூங்காமல் இருக்கின்றோம். குழிப்பதற்குத் தொட்டிகள் அமைத்துள்ளனர். ஆனால் அந்த தொட்டிகளைச் சுத்தம் செய்வது கிடையாது பணம் மட்டும் வசூல் செய்யும் சுங்கச்சாவடி நிர்வாகம் இங்குச் செயல்படும் ஓய்வறைகளை கண்டு கொள்வதே கிடையாது என்றார்.

;