tamilnadu

img

கிருஷ்ணகிரி காவல் நிலைய லாக்கப் மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட சிபிஎம் கோரிக்கை

சென்னை:
கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் நடந்த ‘லாக்கப்’ மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதன் விவரம் வருமாறு:-கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம் பள்ளி வட்டம், புளியாண்டப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த  மதன்குமார் (20). இம் மாதம் 5 ஆம் தேதி கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு காவலர்கள் வழக்கு ஒன்றின் பேரில் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். போலீஸ் காவலில் இருந்த மதன்குமார் செப்.7 ஆம் தேதி இரவு இறந்துள்ளார். போலீஸ் காவலில் இருந்த மதன் குமாரை காவல்துறையினர் அடித்து, துன்புறுத்தி, சித்ரவதை செய்ததன் விளைவாகவே அவர் இறந்துள்ளார் என்பது கிடைக்கப்பெற்ற தகவல்களின் மூலம்  தெரிய வருகிறது. கிருஷ்ணகிரி காவல்துறையினரின் இந்த சட்டவிரோத, மனித உரிமை மீறல் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.மதன்குமார் கடந்த 5 ஆம் தேதி வீட்டை விட்டு சென்றவர் வீட்டிற்கு வரவே இல்லை. இந்நிலையில் 6 ஆம் தேதி கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு காவலர்கள் அதே கிராமத்தில் வசிக்கும் கணேசன் என்பவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் போது தான், மதன்குமார் கிருஷ்ணகிரி காவல்துறையினரின் காவலில் இருப்பதே பெற்றோர்களுக்கு தெரிய வந்துள்ளது. உடனே அவரது பெற்றோர்கள் காவல்நிலையத்திற்கு சென்று தனது மகனை விடுவிக்க வேண்டுமென கேட்டுள்ளனர்.இந்நிலையில் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் இருந்த மதன் குமார்  செப். 7அன்று இரவு 2 மணிக்கு ஊத்தங்கரை மருத்துவமனை யில் இறந்து விட்டதாக பெற்றோர்களுக்கு காவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி காவல் நிலையத்திலிருந்து  47 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊத்தங்கரை மருத்துவமனையில் மதன்குமாரை சேர்த்துள்ளது வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள் ளது. மேலும் காவல்துறையினரின் சித்ரவதையால் மதன்குமார் இறந்துள்ளதை மறைக்கவே, காவல்துறையினர் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெளிவாக தெரியவருகிறது. 

தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் தொடர்கதையாக நிகழ்கின்றன. காவல்துறையினர் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு, சட்டவிதிகளுக்கு புறம்பாக விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்படும் நபர்களை காவல் நிலையத்தில் வைத்து அடிப்பது, சித்ரவதை செய்வது, பொய்வழக்குகளை ஏற்க நிர்ப்பந்திப்பது, அடித்து கொலை செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவது தினசரி செய்திகளாக மாறியுள்ளன. இதனை தடுக்க வேண்டிய தமிழக அரசோ, காவல்துறை உயர்அதிகாரிகளோ எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாததன் விளைவே இதுபோன்ற லாக்கப் மரணங்களும், மனித உரிமை அத்துமீறல் செயல்களும் அதிகரித்து வருகின்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.எனவே மதன்குமார் கொலையில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அனைவரின் மீதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து, உடனே கைது செய்ய வேண்டும். இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். உயிரிழந்த மதன் குமார் குடும்பத்திற்கு ரூ. 50  லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.மேலும், லாக்கப் மரணங்களை தடுப்பதற்கும், காவல்துறையினர் சட்டவிதிகளையும், மனித உரிமைகளையும் மீறாமல் கடமையாற்று வதை தமிழக அரசும், காவல்துறை உயர்அதிகாரிகளும் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

;