tamilnadu

img

நிலமும், வளமும் தப்பியது மகிழ்ச்சியில் விவசாயிகள்!

ஐந்து மாவட்ட விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்புகளுக்கும், எட்டு வழிச் சாலை எதிர்ப்பு கூட்டியக்கம் நடத்திய போராட்டங்களுக்கும் இடையில் மத்திய அரசும், தமிழக அரசும் செயல்படுத்த முனைந்த சென்னை-சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து விவசாயிகளும் பொது மக்களும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.


உறுதிமிக்க போராட்டம்

சென்னை-சேலம் இடையே 8 வழிச் சாலை அமைக்கப்படுவதை கண்டித்து, விவசாயிகளும், விவசாய சங்கங்களும், 8 வழிச் சாலை எதிர்ப்பு கூட்டியக்கம் மற்றும் அரசியல் கட்சியினரும், பல்வேறு வகையிலான போராட்டங்களை நடத்தி வந்தனர். தாய்மண்ணை, மலையை, வனத்தை, நீராதாரத்தை பாதுகாக்க தொடர் போரட் டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இயக்கங்களை நடத்தினர். 8 வழிச் சாலை அமைப் பதை கண்டித்து, கருப்பு கொடி போராட்டம், எதிர்ப்பு பேரணி, கையெழுத்து இயக்கம், சாலை மறியல், கிராம சபைகளில் முற் றுகை போராட்டம் என பல்வேறு இயக்கங்கள் நடத்தப்பட்டன.போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இந்த 5 மாவட்டங்களில் விவசாயிகள் ஒன்று கூடுவதற்கே தடை விதிக்கப் பட்டது. அவசரகால நிலை போன்று விவசாயிகள் நடமாட தடை விதிக் கப்பட்டது. தமிழக அரசு சார்பில் நடத்திய கருத்து கேட்பு கூட்டங்களில் ஒரு பிடி மண்ணைக் கூட, 8 வழிச் சாலை திட்டத்திற்கு தரமுடியாது என விவசாயிகள் கருத்து தெரிவித்தனர். தங்கள் கருத்துக் களை மனுக்களாகவும், நில எடுப்பு அதிகாரிகளிடமும், மாவட்ட ஆட்சியர்களிடமும் அளித்தனர். ஆனால், விவசாயிகள் தாமாக முன்வந்து நிலம் தருவதாக அபாண்டமாக பொய் அறிக்கை வெளியிட்டது தமிழக அரசு.


உயிரிழந்த விவசாயிகள்...

விவசாய நிலங்களில் 8 வழிச் சாலைக்கு அளவீடு செய்யும் பணி நடைபெற்றபோது, தீவிரவாதிகளின் கூடாரங்களுக்கு செல்வதை போல நூற்றுக்கணக்கான போலீசார் நிலத்தை சுற்றி குவிக்கப்பட்டனர். தங்கள் நிலங்களில் அளவீடு கற்கள் நடுவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.கிணற்றில் குதித்தும், கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டும் தற்கொலை முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்த கொடுமைகளின் உச்சகட்டமாக, சாலையனூர் கிருஷ்ணமூர்த்தி, செங்கம் மேல் வணக்கம்பாடி சேகர், கரிப்பூர் விவசாயி பாலுவின் தந்தை மற்றும் கொலக்கரவாடி, ராந்தம் கிராமங்களின் விவசாயிகள் உட்பட 5 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.


போராட்டக் களத்தில் கம்யூனிஸ்ட்டுகள்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி திருவண்ணாமலை முதல் சேலம் வரையிலான நடைபயண இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்டது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்த நடை பயணத்திற்கு தலைமை தாங்கினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நடைபயணத்தை துவக்கி வைத்தார். தங்களது வாழ்விற்கு ஆதாரமாக உள்ள விளை நிலங்களை சாலை திட்டத்திற்கு தந்துவிட்டு, எங்கே செல்வது, எப்படி வாழ்வது என்று கலங்கி நின்ற ஆயிரக்கணக் கான விவசாயிகள் இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டனர். இந்த நடைபயணத்தை தடுத்த காவல் துறையினர், மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களை கைது செய்து 3 நாட்கள் சிறை வைத்தனர். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்பும் நடைபயணத்தை தொடர்ந்தனர். பின்னர் மாவட்ட நீதிபதியின் ஆலோசனையின் பேரில், நீதிமன்ற உத்தரவுடன் நடை பயணத்தை தொடர்வது என முடிவெடுக்கப்பட்டது.இதன் பின்னணியில், எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து பல்வேறு அமைப்பினரால் தொடரப்பட்ட வழக்கில்தான் அந்த திட்டத்தை ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 


வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!

இந்த தீர்ப்பு குறித்து 8 வழிச் சாலை திட்ட எதிர்ப்பு கூட்டியக் கத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.அபிராமன் கூறுகையில், “தமிழகத்தில் கடந்த ஆண்டு மிகப்பெரிய துயரம் அரங்கேற்றப் பட்டது. அதற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வங்கியுள்ளது. எதிர்காலத் தில் மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்தை தொடர நினைத்தால், மிகப்பெரிய போராட்டம் நடத்தவும் எங்கள் கூட்டியக்கம் உறுதியாக உள்ளது” என்றார்.இந்த திட்டத்துக்கு எதிராக செயல்பட்டு, அதற்காக கைது செய்யப்பட்டவருமான போராளி இல.அழகேசன் கூறியபோது, இந்த தீர்ப்பின் மூலம் விவசாயிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஆனாலும் போர் முடியவில்லை. எதிர்காலத் தில் விவசாயிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார்,“ இந்த திட்டம் அமலாகியிருந்தால் ஏராளமான இயற்கை வளங்கள் பாலைவனமாகியிருக்கும். விவசாயத்தைவிட்டு மக்களை வெளியேற்றும் இந்த திட்டத்தை நீதிமன்றம் தடுத் துள்ளது. இதற்காக போராடிய அனைத்து தரப்பினருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.  


மீண்ட வாழ்வு

இந்த தீர்ப்பின் மூலம், முடிவிற்கு செல்ல வேண்டிய தங்கள் வாழ்வு மீண்டதாக கூறுகின்றனர் விவசாயிகள். திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் அடுத்த மண்மலை காத்தாயி வள்ளி, சே.நாச்சிப்பட்டு வெங்கடேசன். ராந்தம் கிராம விவசாயிகள் பாலகிருஷ் ணன், சக்கரபாணி உள்ளிட்ட பலர் தங்கள் இந்த தீர்ப்பின் பின்னரே நிம்மதி பெருமூச்சு விடுவதாக தெரிவித்துள்ளனர்.


கொண்டாட்டம்

இந்த நீதிமன்ற தீர்ப்பையடுத்து, திருவண்ணாமலையில் விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். வழக்கறிஞர் அபிராமன், கூட்டமைப்பு நிர்வாகிகள் அழகேசன், ஆர்.டி.பிரகாஷ், குழந்தைவேலு, பாசறைபாபு, மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் எம். சிவக்குமார், எம்.வீரபத்திரன், சிபிஐ முத்தையன், திமுக நிர்வாகிகள் இரா.ஸ்ரீதரன், கார்த்திவேல்மாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


எடப்பாடி அரசுக்கு மரண அடி: பெ.சண்முகம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம்,“ சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை தொடர்பான வழக்கில், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தும், எட்டு வழிச் சாலை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்தும், சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. இது விவசாயிகளின் விடாப்பிடியான போராட்டத் திற்கு கிடைத்த வெற்றியாகும். விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் சட்டவிரோதமாக காவல் துறையை ஏவி விவசாயிகளை அச்சுறுத்தியும், அடக்குமுறையின் மூலமும், தமிழக அரசு நிலத்தை கையகப்படுத்தியது. சட்டவிதிகளுக்கு புறம்பாக அவசர அவசரமாக அரசாணை பிறப்பித்து, நிலம் கையகப்படுத்திய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மரண அடி கொடுத்திருக்கிறது. இந்த அரசாணையை எரித்தது குற்றம் என்று கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட எட்டுவழிச்சாலை எதிர்ப்பு கூட்டியக்கத் தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை சிறையிலடைத்தது எடப்பாடி அரசு என்பதை சுட்டிக்காட்டுகிறோம். அரசு அடாவடித்தனமாக நிலத்தை பறிக்க முயற்சித்தாலும் நீதிமன்றம் விவசாயிகளின் நிலத்தை பாதுகாத்திருக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசு, மேல்முறையீடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடாமல், சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை திட்டத்தை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட வேண்டும். இது தொடர்பாக விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


-ஜெ.எஸ்.கண்ணன்

;