tamilnadu

img

டிசம்பர் 3 - மாற்றுத்திறனாளிகள் உலக தினம் -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

மாற்றுத்திறனாளிகள் உலக தினத்தை முன்னின்ட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுள்ளதாவது

கண்ணியம் மற்றும் சமத்துவமிக்க வாழ்க்கைக்கான தேடலுடன் வாழும் லட்ச கணக்கான அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது உலக தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.
இந்தியாவை பொறுத்தமட்டில், ஒன்றிய பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்ட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு ஆண்டும் நிதியை வெட்டி சுருக்கி மாற்றுத்திறனாளிகளுக்கு துரோகம் இழைத்து வருகிறது மோடி அரசு. நாட்டில் உள்ள மொத்த மாற்றுத்திறனாளிகளில் 0.38 சதவீதம் பேருக்கு மட்டுமே ஒன்றிய அரசு வழங்கும் ரூ.300/-ஐக்கூட மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொஞ்சம்கூட உயர்த்தாமல் இரக்கமற்ற முறையில் நடந்து கொள்கிறது.
2011 மக்கள் தொகையின்படி வேலை செய்யும் வயதுடைய மாற்றுத்திறனாளிகளில் 63.67 சதவிகிதம் பேர் எந்த வேலையும் இல்லாதவர்கள். கிராமப்புற ஏழை மாற்றுத்திறனாளிகள் செய்து வருகிற 100 நாள் வேலை திட்டத்தைக்கூட எப்படியாவது தட்டிப்பறிக்க வேண்டுமென மோடி அரசு துடித்துக் கொண்டிருக்கிறது.
2016ல் நாடாளுமன்றம் இயற்றிய மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த அரசுகள் மறுக்கின்றன. நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டிய பல்நோக்கு அடையாள சான்று, அனைவருக்கும் உள்ளடங்கிய இலவச கல்வி, வேலைவாய்ப்பு, தடையற்ற சூழல், மாற்றுத்திறனாளி பெண்கள் / சிறுமிகள் உள்ளிட்டோருக்கான சமூகப் பாதுகாப்பு போன்றவைகள் அமலாகாமல் உள்ளன.
கடந்த ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, சுமார் 2.11 லட்சம் பேருக்கு மாத உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கி வருவதை பெருமையாக பார்க்கும் அதேவேளையில், சுமார் 4 லட்சம் பேருக்கு வருவாய்த்துறை மூலம் பட்டுவாடா செய்யப்படும் உதவித்தொகை வெறும் ரூ.1000 மட்டுமே தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது எந்த விதத்திலும் போதுமானது அல்ல.   
சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தனது அரசு நிச்சயம் பூர்த்தி செய்யும் என அறிவித்ததை வரவேற்கிறோம்.  அதேவேளையில், கோரிக்கைகளை நீண்ட காலம் கிடப்பில் போடாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம் என கருதுகிறோம்.
மேலும், உரிமைகள் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் முன்னெடுக்கும் அனைத்து இயக்கங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும் என இந்த உலக தினத்தில் உறுதி அளிக்கிறோம்! வாழ்த்துகிறோம்!!

 

 

;