tamilnadu

img

பட்ஜெட் 2021.... தொழில்துறையினர் வேதனை...

அரசு கணக்குப்படி 6 கோடி தொழில் முனைவோர் உள்ள சிறு-குறு தொழில் துறைக்கு ரூ.15700 கோடி நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. குறுந்தொழில்கள் முன்னேற்றத்துக்காக முன்வைக்கப்பட்ட எவ்வித கோரிக்கையும் அறிவிக்கப்படவில்லை. குறைந்த வட்டியில் குறுந்தொழில் முனைவோருக்கு தனி கடன் திட்டம், குறுந்தொழில் தொழில் பேட்டைகள்,   அனைத்து கடன்களுக்கான ஒரு ஆண்டுக்கு வட்டி தள்ளுபடி, குறுந்தொழில்களுக்கு தனி வாரியம், மூலப்பொருள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கமிட்டி என எதுவும் இல்லை. ஜிஎஸ்டி குறைப்பு இல்லாததும் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. குறுந்தொழில்களுக்கு உதவிகரமாக இருக்கும் பொதுத்துறை, வங்கிகள், எல்ஐசி, மின்சார வாரியம் தனியார்மயம் படுத்துதல் என்பது வரக்கூடிய காலத்தில் குறுந்தொழில்களுக்கு கிடைக்கின்ற கடன்கள் கிடைக்கப் பெறுவது என்பது அரிதாகிவிடும்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் (டாக்ட்) சங்கம்

                                        **********************

குறு மற்றும் சிறு தொழில் வளர்ச்சிக்கு 15 ஆயிரத்து 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், ஜிஎஸ்டி கணக்கு சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள் எளிமையாக்கப்படும், மூலப் பொருட்களுக்கான சுங்கவரி 7.5 சதவீதமாக குறைக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை வரவேற்கிறோம். ஆனால், கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு முடங்கிய தொழில்கள் தற்போது வளர்ச்சிப் பாதையில் செல்லும் வேளையில் தொழில் முனைவோர் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எதிர்பார்த்த சலுகைகள் அறிவிப்பு இல்லாதது, மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி அதனை குறைப்பதற்கான விரிவான அறிவிப்புகள் இல்லாதது, தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லாதது ஆகியவை ஏமாற்றமளிக்கிறது. வங்கித் துறைக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் 20 ஆயிரம் கோடி ரூபாய் உதவியை கொரோனா தடுப்பு ஊரடங்கினால் பாதிக்கப்பட்டு, இதுவரை வங்கியினால் எவ்வித உதவியும் கிடைக்காத ஒரு தொழில் முனைவோர்களுக்கு வழங்கி உதவ வேண்டும்.

காட்மா (கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும்  ஊரக தொழில் முனைவோர் சங்கம்) 

                                        **********************

தமிழகத்தில் சாலை வசதி மேம்பாட்டிற்கு ரூ.1.03 லட்சம் ஒதுக்கீடு செய்ததை வரவேற்கிறோம்.  ஆனால், இந்தியா முழுவதும் உள்ள சிறு குறு தொழில்களின் வளர்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் கோடி மட்டும் ஒதுக்கீடு செய்திருப்பது யானைப் பசிக்கு சோளப்பொறி போல உள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் ஆறு மாத வட்டி காலத் தவணை மட்டுமே மத்திய அரசால் நீட்டித்து தரப்பட்டது. அந்த தவணைக் காலம் முடிந்த அடுத்த நாளே மொத்த வட்டி தொகையை வங்கிகள் அதிரடியாக வசூலித்தன. இன்னும் இந்த பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலையில் குறுந் தொழில் முனைவோர்கள் தவித்து வருகின்றனர்.  மோட்டார் மற்றும் பம்ப்செட் மீதான ஜிஎஸ்டி வரி குறிப்புகள் பற்றி எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. பெட்ரோல் டீசல் விலையை குறைக்க அதன் மீதான கலால் வரிகள் குறைக்க எந்தவித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இரும்பு உள்ளிட்ட அனைத்து மூலப்பொருட்களும் கடுமையான விலை ஏற்றத்தின் உச்சியில் உள்ளன. ஆனால் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. தொழில்முனைவோர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பட்ஜெட்டில் எங்களுக்கு பயனுள்ள அறிவிப்புகள் எதுவும் இல்லை என்பது அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கோப்மா (கோவை பம்ப் செட் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள்) சங்கம்

;