tamilnadu

img

மூட்டுமாற்று மறு அறுவை சிகிச்சை

செங்கல்பட்டு, ஏப்.8-காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி(38). இவரது கணவர் பச்சையப்பன் கடந்தபத்து மாதத்திற்கு முன் உயிரிழந்தார். கூலித்தொழிலாளியான லட்சுமி, 2 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்துவருகின்றார். 10 ஆண்டுகளுக்கு முன் லட்சுமியின் வலது பக்க இடுப்பில்காயம் ஏற்பட்டது. அப்போது அவர் இடுப்பு எலும்பு முறிவிற்காக, இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன் பிறகு அவரால் சரியாக நடக்க முடியாமல்சிரமப்பட்டு வந்தார். மேலும், அவருக்குப் பொருத்தப்பட்ட செயற்கை மூட்டு, இரண்டு முறை நழுவியுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருடைய தொடை எலும்பின் பந்து கிண்ண மூட்டு இருக்கும் குழிவு பகுதி விலகி இருந்ததையும், மூட்டுக் கிண்ணம் தளர்வாகித் திருகுஉடைந்து இருந்ததையும் கண்டறிந்தனர்.


இதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் உஷா சதாசிவம் மேற்பார்வையில் எலும்பு முறிவு மாற்று மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் துறைத் தலைவர் மருத்துவர் மனோகரன் தலைமையில், மருத்துவர்கள் கலையரசன் எழில்மாறன், ராஜ்குமார் மற்றும் இயக்கவியல் மருத்துவர் மாலா, ரஜினிகாந்த், சித்ரா உள்ளிட்ட மருத்துவர்கள் தொடர் சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் அவருக்கு மூட்டு மாற்று மறு அறுவை சிகிச்சையும்செய்யப்பட்டது. தற்போது அவர் பூரணமாகக் குணம் அடைந்துள்ளார்.


இதுகுறித்து துறைத் தலைவர் மனோகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டிருந்தால் 4 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகியிருக்கும். முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்துள்ளோம். லட்சுமியின் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக அவருக்குப் பொருத்தப்பட்டுள்ள உபகரணங்கள் மட்டும் சுமார் ஒரு லட்சம் ரூபாய். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பந்து கிண்ண மூட்டு மாற்று மறு அறுவை சிகிச்சை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செய்யாத அறுவை சிகிச்சைகள் கூட இங்குச் செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.



;