சென்னை:
உடல்நலக்குறைவால் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு நலமுடன் இருப்பதாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. 94 வயதான அவருக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதிக்கப் பட்டார். நல்லகண்ணுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காய்ச்சலால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நல்லகண்ணு உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் ஆர். நல்லகண்ணு சளி, காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் தற்போது நலமுடன்இருக்கிறார். கட்சியினர் மற்றும் நண்பர்கள், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், நேரில் பார்த்தும் நலம் விசாரிக்க முயற்சிப்பதை தவிர்க்கவேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.
நலம் விசாரிப்பு
ஆர்.நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலசெயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ்ஆகியோர் தொலைபேசி மூலம் சிபிஐமாநிலச் செயலாளர் இரா.முத்தரசனிடம் நல்லகண்ணுவின் நலம் விசாரித்தனர்.