tamilnadu

img

விதிமுறைகளை மீறி ஏரியில் வீட்டுமனைப் பிரிவுகள்

விற்பனையைத் தடுத்திட விவசாயிகள் சங்கம் கோரிக்கை 

செங்கல்பட்டு, டிச. 27- ஒழலூர் கிராமத்தில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஒழலூரில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் பாசன ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம்  ஒழலூரில் 400 ஏக்கர், புதுப்பாக்கம் கிராமத்தில் 250 ஏக்கர்,  ஒத்திவாக்கம் கிராமத்தில் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரியில் உள்ள சுமார் 150 ஏக்கர் நிலம் 2005ஆம் ஆண்டு ஒரு சில தனி நபர்களால் வீட்டுமனைப் பிரிவுகளாக மாற்றி விற்பனை செய்யப்பட்டன. அப்போது கிராம மக்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் உதவியுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் விற்பனை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் சங்கம் நடத்தியப் போராட்டத்தினால் 2016ஆம் ஆண்டு  மாவட்ட நிர்வாகம் ஏரியை அளவீடு செய்து வீட்டுமனைப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ள நிலம் புஞ்சை நிலம் என்பதால் விற்பனை செய்யத் தடை விதித்ததுடன் வீட்டுமனைப் பிரிவுகளாக மாற்றப்பட்ட இடம் முழுவதும் ஏரியின் நீர் பரப்பு (நீர்முழக்கடை) பகுதி  என அறிவித்து ஆணை பிறப்பித்தது. இதனால் அந்த இடத்திற்கான வீட்டுமனைப் பிரிவு அமைக்க அனுமதி மறுக்கப்பட்டு வட்டாட்சியர் தலைமையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த அளவுக் கல் அகற்றப்பட்டது.

ஏரிக்குள் கட்டுமானப் பணிகள் செய்யக்கூடாது என மாவட்ட வருவாய் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் மீண்டும் சில அரசு அலுவலர்களின் உதவியோடு அந்த மனைகளுக்கு அனுமதி வழங்கியிருப்பதாக கூறப்படுகின்றது. தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை பெய்திருப்பதால் ஒழலூர் ஏரி முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் விதி முறைகளை மீறி அமைக்கப்பட்ட வீட்டு மனைப் பிரிவுகளிலும் எட்டடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த மகாலட்சுமி நகர் இதே போன்று விவசாய நிலங்களை வீட்டுமனைப் பிரிவுகளாக மாற்றி விற்பனை செய்ததால் அப்பகுதி முழுவதும் குடியிருப்பு பகுதியாக மாறியுள்ளது. மழைக்காலங்களில் அப்பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்குவதும் குடியிருப்பு வாசிகள் போராட்டம் நடத்துவதும் அவர்களைப் படகு மூலம் மாவட்ட நிர்வாகம் மீட்பதும் தொடர்கதையாக உள்ளது. அதே போன்று ஒழலூர் ஏரி நீர் பரப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுமனைப் பிரிவுகளும் எதிர்காலத்தில் குடியிருப்புகள் ஏற்பட்டால் மகாலட்சுமி நகர் போலவே மாறும் நிலை உள்ளது. உடனடியாக ஒழலூர் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுமனைப் பிரிவுகளின் விற்பனையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.மோகனன், மாவட்டச் செயலாளா் கே.நேரு ஆகியோர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேரு கூறுகையில், ஏரியில் விதிமுறைகளை மீறி வீட்டுமனைப் பிரிவுகளை ஏற்படுத்தி விற்பனை செய்துவருகின்றனர். தற்போது ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் வீட்டுமனைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ள இடத்தில் ஆள் உயரத்திற்குத் தண்ணீர் உள்ளது. இதற்கெதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். தற்போது உயர்நீதிமன்றம் நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியுள்ளது. அதற்குட்பட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2016ஆம் ஆண்டு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு ஆணை எண் 13395/2016 படி ஒழலூர் ஏரியில் போடப்பட்டுள்ள வீட்டுமனைப் பிரிவுகளை பதிவு செய்யத் தடை விதிக்க வேண்டும் என்றார்.

;