tamilnadu

img

எச்.ராஜா மீது 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

நீதிமன்றம் குறித்து அவதூறான கருத்து தெரிவித்த எச்.ராஜா மீது 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
புதுக்கோட்டை திருமயத்தில் 2018 செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மேடை அமைக்க போலீஸார் அனுமதி மறுத்தனர். இது தொடர்பாக போலீஸாரிடம் எச்.ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு நீதிமன்றம் குறித்து அவதூறான வார்த்தைகளில் பேசினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து எச்.ராஜா மீது நீதிமன்றத்தை அவதூறாக பேசியதுடன் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக திருமயம் போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். 
இதனிடையே நீதிமன்றத்தை பகிரங்கமாக விமர்சித்தது தொடர்பாக எச்.ராஜா மீது சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான எச்.ராஜா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இதனால் அவமதிப்பு வழக்கு முடிக்கப்பட்டது.
இந்நிலையில் எச்.ராஜா மீது திருமயம் போலீஸார் பதிவு செய்த வழக்கில் விசாரணையை முடித்து விரைவில் நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக துணைத் தலைவரும், வழக்கறிஞருமான துரைசாமி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா எச்.ராஜா மீதான  வழக்கில் விசாரணையை முடித்து 2 மாதத்தில் நீதித்துறை நடுவர் மன்றத்தில் திருமயம் காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவிட்டார்.
 

;