tamilnadu

img

சாலைகளில் குடியிருந்த மக்களுக்கு கே.பி.பார்க் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கிய தமிழக அரசு: மார்க்சிஸ்ட் கட்சி நன்றி

சாலைகளில் குடியிருந்த மக்களுக்கு கே.பி.பார்க் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கிய தமிழக அரசிற்கு மார்க்சிஸ்ட் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா அளித்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

எழும்பூர் ரயில் நிலையம் அருகில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தெருவோரத்தில் வசித்து வந்த 59 குடும்பங்களை 2021 அக்டோபர் 16 அன்று வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு அருகாமையில் சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற வீடற்றோருக்கான காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மாற்றுக் குடியிருப்புகள் ஒதுக்காமல் கண்ணியமற்ற முறையில் காவல்துறையை கொண்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றியதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு, கே.பி.பார்க் திட்ட பகுதி-2 இல் வீடுகளை ஒதுக்க கோரி 2021 அக்டோபர் 17ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2021 டிசம்பர் 20 அன்று தமிழக முதல்வரின் முதன்மை செயலாளரை மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நேரில் சந்தித்து எழும்பூர் தெருவோரத்தில் வசித்து வந்த மக்களுக்கும் மற்றும் தீவுத்திடல் கூவம் கரையோரம் இருக்கும் 191 குடும்பங்களுக்கும் கே.பி.பார்க் திட்டப் பகுதி-2இல் குடியிருப்புகளை ஒதுக்க கோரி மனு அளிக்கப்பட்டது. முதல்வரிடம் தெரிவித்து கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற முதன்மை செயலாளர் உறுதியளித்திருந்தார்.

இச்சூழலில், மேற்கண்ட 59 குடும்பங்களுக்கும் கே.பி.பார்க் திட்டப்பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் குடியிருப்புகளை ஒதுக்கி ஆணை வெளியிட்டுள்ளது. தெருவோரத்தில் வசித்து வந்த மக்களுக்கு சுமார் 3 கிலோ மீட்டருக்குள்ளாக குடியிருப்புகளை ஒதுக்கிய தமிழக முதல்வர், நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்விட உரிமையை வலியுறுத்தி ஒன்றுபட்டு குரலெழுப்பிய பொதுமக்களுக்கும் ஆதரவாக செயல்பட்ட அமைப்புகள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.