tamilnadu

img

சிக்கலான முதுகு எலும்பு வளைவை சரி செய்த அரசு மருத்துவர்கள்

சென்னை, மே 16- சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி. பள்ளிப் படிப்பை முடித்திருந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு மேலாக நடக்க முடியாத நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முடநீக்கியல் துறையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முன்பக்கமாகவும் மற்றும்பக்கவாட்டிலும் முதுகு எலும்பு வளைவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் நரம்பு நார்க்கட்டி (நீரோ பைப்ரோமா) எனும் நோயினால் பாதிக்கப்பட்டுஇருந்தார். நோயாளி தன் இரு கால்களில் முற்றிலுமாக பலம் இழந்ததோடு, உணர்வற்றும் இருந்தார். முதுகு எலும்பு வளைவு ஏற்பட்ட பகுதியில் அவருக்குவலி உணர்வும் இல்லை. துறைத்தலைவர் மருத்துவர் இஸ்மாயில் வழிகாட்டுதலுடன் முதுகெலும்பு அறுவைசிகிச்சை நிபுணர் பேராசிரியர் நல்லியுவராஜ் மற்றும் உதவிப் பேராசிரியர் ஜவகர் ஜில் அடங்கிய குழு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நோயாளிக்கு முதல்கட்ட அறுவை சிகிச்சையின் போது தலையில் பொருத்தக்கூடிய வளையத்தோடு, உடலுக்கான கவசமும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. பிறகு பொருத்தப்பட்ட அக்கருவியின் மூலம் முதுகு எலும்பின் வளைவை நேர் செய்வதற்காக கருவியில் உள்ள திருகாணியை இயக்குவதன் மூலம் தினமும் சிறிது சிறிதாக நேர்செய்யும் செயல் நடந்தது. இந்தமுயற்சி தொடர்ச்சியாக 6 வார காலம்செய்யப்பட்டது. இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அந்தமுன்னேற்றதைத் தக்கவைத்துக்கொள்ள (பின்னடைவு ஏற்படாமல் இருக்க) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பின்புறமாகவும் திருகாணி மற்றும் கம்பி பொறுத்தப்பட்டது. மேலும் வளைந்த எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைவதற்காக நோயாளியின் உடம்பில் இருந்தே மஜ்ஜை நிறைந்த எலும்பு குறைந்தளவு எடுத்து சேர்க்கப்பட்டது.அந்த நோயாளி அறுவைசிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையிலே, பிறரின் உதவியுடன் மெல்ல மெல்ல நடக்க ஆரம்பித்தார். கடந்த டிசம்பர் மாதம் வீட்டிற்கு சிகிச்சை முடிந்து அனுப்பி வைக்கப்பட்டார். வீட்டில் இருந்தபடியே இயன்முறை சிகிச்சைக்கு வழிகாட்டப்பட்டது. தற்பொழுது மாணவி முழுமையாக குணமடைந்து, யாருடைய உதவியும் இன்றி நடக்க ஆரம்பித்துவிட்டார். கல்லூரி சென்று படிக்க வேண்டும் எனும்மன ஊக்கத்தையும் பெற்றுள்ளார்.இந்த சிகிச்சையானது தனியார்மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டால் குறைந்தது 6 முதல் 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இந்த மாணவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முழுதும் எந்தவித கட்டணமும் இல்லாமல் அளிக்கப்பட்டது. அரசு மருத்துமனைகளில் இப்படிப்பட்ட உயர்தர சிகிச்சைகள் ஓசையின்றி நாளும் நடைப்பெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை சிக்கல் நிறைந்த சவாலான பல தண்டுவட அறுவைசிகிச்சைகளைத் தொடர்ந்து வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது.நீரோ பைப்ரோமா நோயானது மரபு சார்ந்து நிகழக்கூடிய நோயாகும்.இந்த நோயினால் அதிகமாக நரம்புமண்டலமும், எலும்புகளும் பாதிக்கப்படுகின்றன. முதுகு எலும்புகளில் இந்த நோய் தாக்கும்போது சிக்கலான வளைவுகளை உண்டாக்கும்.(முன்பக்கம், அல்லது பக்கவாட்டில்) எலும்பு வளைவினால் தண்டுவடம் பாதிக்கப்பட்டு நோயாளியின் கைகால்களில் உள்ள பலம், மற்றும் உணர்வுகளை இழக்க நேரிடும். மேலும் இந்நோயினால் எலும்புகளின் பலமும் இழப்பதால் இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பது சவாலான ஒன்றாகும்.

;