tamilnadu

img

நாளை முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு.... தமிழக அரசு அறிவிப்பு....

சென்னை:
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த திமுக தலைமையிலான புதிய அமைச்சரவை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அமைச்சரவை பதவி ஏற்றவுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர் களுடன் காணொலி காட்சி மூலம் வெள்ளியன்று மாலை ஆலோசனை நடத்தினார்.ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் மேலும் சில கட்டுப்பாடுகளை கண்டிப்பாககொண்டு வர வேண்டும். அப்போதுதான் நோய்த் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்றுமருத்துவ வல்லுநர்கள் தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கினர்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.03.2020முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறுதளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மார்ச் 2021 முதல் தொடர்ந்து கோவிட் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்துகொண்டிருக்கிறது.

அண்மைக் காலங்களில் இந்திய அளவில் நாளொன்றுக்கு நான்கு லட்சத்தைத் தாண்டியும் பதிவாகி உள்ளது. குறிப்பாக, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா, உத்தரப்பிரதேசம், தில்லி மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் நோய்த் தொற்று அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.தமிழ்நாட்டிலும் படிப்படியாக இந்த நோய்த்தொற்று, பிப்ரவரி மாதக் கடைசியில் நாளொன் றுக்கு 450 என்ற நிலை மாறி தற்பொழுது நாளொன்றுக்கு  26,000-க்கும் மேல் பதிவாகி வருகிறது.  23-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய்த்தொற்று உறுதியாகும் எண்ணிக்கை நாளொன் றுக்கு 10 விழுக்காட்டிற்கும் மேல் உள்ளது.  தமிழ்நாட்டில் 7.5.2021-ஆம் நாள் கணக்கீடுபடி, தற்போதுநோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1.35லட்சமாக உள்ளது.

தற்போதுள்ள நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம், அண்டை மற்றும் இதர வெளிமாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற் குள்ளானவர்களின் எண்ணிக்கை, மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களது பரிந்துரையின் அடிப்படையிலும், மத்திய அரசின் உள் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படியும், கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம்,2005-ன் கீழ், தற்போது 1.5.2021 முதல் தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10 மணி முதல்காலை 4 மணி முடிய பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக அரசு சனிக்கிழமையன்று  வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கொரோனா பரவலை தடுக்க வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் இரண்டுவாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது. உணவகங்களில் பார்சல் வழங்க அனுமதி வழங் கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காய்கறிக் கடை, மளிகைக் கடை, தேநீர்க் கடைநண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தின் போது அழகு நிலையம், முடி திருத்தும் கடைகள் இயங்காது அரசு தெரிவித்துள்ளது.ஏற்கனவே ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்பட்டு இருந்தது. இந்தநிலையில் வருகிற 10ஆம் தேதி முதல் முதல் ஊரடங்கு அமல் படுத்துவது இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.இதனால் வழக்கம்போல் காலை 6 முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் வழக்கம் போல்செயல்படும். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ளலாம்.அதேபோல், அரசு பேருந்துகள் வெளியூருக்குச் செல்ல 24 மணி நேரமும் ஞாயிற்றுக்கிழமைமட்டும் இயக்கப்படும் என்றும் அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                            *******************

முழு ஒத்துழைப்பு தருக.... தமிழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்.... 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்குக்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக் குறையினால் உயிரிழப்பு ஏற்பட்டு வருவது மிகுந்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு நோய்த் தொற்று மிகத் தீவிரமடைந்து மக்கள் மோசமான பாதிப்புக் குள்ளாகும் நிலைமை ஏற்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். கொரோனா நோய்த் தொற்று பரவல் மற்றும்உயிரிழப்புகளை தடுப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும், மருத்துவக் குழுவினர்களும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும், கட்டுப் பாடுகளை கடுமையாக்க வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய் பரவலைகட்டுப்படுத்த தமிழக அரசு 2021 மே 10ஆம்தேதி முதல் 24ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. பதவியேற்றது முதல் தமிழக முதலமைச் சரும் மற்றும் அமைச்சர்களும் கொரோனாநோய்த் தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கானதுரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.

மேலும் கொரோனா நிவாரணமாக ரூ.2,000 அறிவித்துள்ளதும் மிகவும் உதவிகரமானதாக இருக்கும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டுமானால் தமிழக அரசின் அறிவிப்பிற்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு நல்கி ஊரடங்கை கறாராக கடைப்பிடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறது.

நியாயமான கட்டணம் நிர்ணயம் செய்க

* தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு மிகக் கொடூரமான முறையில் கூடுதலான கட்டணம்வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணக் கொள்ளையால் பல குடும்பங் கள் தங்களின் வாழ்வாதாரம் அனைத்தையும் இழக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தனியார்மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு தமிழக அரசு நியாயமானகட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டுமெனவும், அதனை உடனடியாக பொதுவெளியில் அறிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

* முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் பயன் பெற தீர்மானிக்கப்பட்டுள்ள வருமான வரம்பினை உயர்த்தினால் மட்டுமே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் காப்பீட்டுச்சலுகை பெற முடியும். எனவே, வருமானவரம்பினை உயர்த்திட கேட்டுக் கொள்கிறோம்.

* கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இரண்டு மடங்கு தேவை அதிகரித்துள்ளதால் தமிழக அரசு கேட்டுள்ளஆக்சிஜனை உடனடியாக மத்திய அரசுவழங்கிட வேண்டும். தமிழகத்திற்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களையும் வழங்கிட வேண்டும்.

*  தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனாநிவாரணம் ரூ. 2,000த்தை உடனடியாக இந்த ஊரடங்கு காலத்திலேயே வழங்கிட வேண்டும்.

முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி கூடுதல் விலையில் விற்பவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.

கூடுதல் போக்குவரத்து வசதிகள் தேவை

* முழு ஊரடங்கிற்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் வெளியூரில் தங்கிபணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு கூடுதலான பேருந்துகள் மற்றும் இதர போக்குவரத்து வசதிகளை செய்து தர வேண்டும்.

*   ஊரடங்கை அமல்படுத்துகிறோம் என்ற பெயரால் பொதுமக்களை காவல்துறை மற்றும் அதிகாரிகள் அச்சுறுத்தக்கூடாது எனவும் கேட்டுக் கொள்கிறோம்.தமிழக மக்கள் இந்த முழு ஊரடங்கு காலத்தில் அவசரத் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாமெனவும், மாஸ்க் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதுபோன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை கறாராக கடைபிடிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

                            ****************

மார்க்சிஸ்ட்  கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்

அதிகரித்து வரும் கொரோனா பேரிடரிலிருந்து மக்களை காக்கும் பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள், கிளைகள் ஈடுபட வேண்டும். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஊரடங்கிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை நல்க வைப்பது, நோய் பரவல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களை சந்தித்து முறையிடுவது, கபசுர குடிநீர் - முகக் கவசம் வழங்குவது, சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட உயிர் காக்கும் பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டுமென கட்சி அணிகளை மாநில செயற்குழு வேண்டுகிறது.

;