tamilnadu

img

சுதந்திர போராட்ட வீரர்கள் அலங்கார ஊர்திகள் நிராகரிப்பு:ஒன்றிய அரசிற்கு எதிராக கண்டனம் முழங்கிட மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்

சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்திகள் நிராகரித்த ஒன்றிய அரசிற்கு எதிராக ஜனவரி 26 கண்டனம் முழங்கிட மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

இந்திய குடியரசு தின அணி வகுப்பில் ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறை சாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், வீரத்தாய் வேலுநாச்சியார் ஆகியோர் உருவம் கொண்ட அலங்கார ஊர்திகளை ஒன்றிய பாஜக அரசு அனுமதி மறுத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும், தமிழக மக்களையும் புறந்தள்ளியது.

இந்நிலையில் ஒன்றிய அரசின் இந்நடவடிக்கைக்கு எதிராக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  பிரதமருக்கு கடிதம் எழுதியதுடன், நாட்டுப் பற்றிலும், விடுதலை வேட்கையிலும், தமிழ்நாட்டின் பெருமையை  பறைசாட்டும் இத்தகைய வீரர்களின் அலங்கார ஊர்திகள் மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறுவதோடு, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என்று அறிவித்தார்.

மேலும் தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்.

தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் தமிழக அரசின் சார்பில் அணிவகுத்து வரும் அலங்கார ஊர்திகளுக்கு கட்சி அணிகளும், வர்க்க - வெகுஜன அமைப்புகளும் ஆங்காங்கே வரவேற்பதுடன், ஒன்றிய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்திட மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

மேலும், அலங்கார ஊர்திகள் வராத இடங்களிலும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று தமிழகம் முழுவதும்  விடுதலைப் போராட்ட தியாகிகளின் உருவச்சிலைக்கும், மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் தியாகிகளின் உருவப்படங்கள் வைத்து மாலை அணிவித்து அவர்களது தியாகத்தை

பறைசாட்டும்  வகையிலான நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திடவும்,  ஒன்றிய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்திட வேண்டுமெனவும் கட்சியின் அனைத்து அமைப்புகளையும் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த 11 சதவிகித இறக்குமதி வரியை உடனே நீக்குக!

ஜவுளித் தொழிலுக்கு ஆதாரமான பருத்தி மற்றும் நூல் விலை கடந்த ஓராண்டு காலத்துக்கு மேலாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. குறிப்பாக கடந்த நவம்பர் மாதம் கிலோவுக்கு ரூ.50, ஜனவரியில் கிலோவுக்கு ரூ.30 என்ற அளவில் அதிகரித்து, பருத்தி நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டிருக்கக் கூடியவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் சுருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜவுளித் தொழிலுக்கு மூலப்பொருளான பஞ்சு விலை உலக அளவில் அதிகரித்திருப்பதால் விலை உயர்வு ஏற்படுகிறது. அதேசமயம் எப்போதும் இந்திய பருத்தி விலையை காட்டிலும் சர்வதேச பருத்தியின் விலை அதிகமாகவே இருக்கும்.

ஆனால் ஒன்றிய அரசின் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தபோது விதித்த 11 சதவிகித இறக்குமதி வரி காரணமாக, வரலாற்றில் முதன்முறையாக இந்திய பருத்தியின் விலை சர்வதேச பருத்தியின் விலையைக் காட்டிலும் அதிகரித்து, இந்திய ஜவுளித் துறையின் சர்வதேச போட்டித் திறனை பாதித்துள்ளது. எனவே பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கு, இறக்குமதி வரி 11 சதவிகிதத்தை ஒன்றிய அரசு உடனடியாக நீக்க வேண்டும்.

கடந்த அக்டோபர் மாதம் ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ.65 ஆயிரமாக இருந்த நிலையில் நவம்பர் மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.50 அதிகரித்தது. ஆனால் தற்போது ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ.76 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது. எனவே வரக்கூடிய நாட்களில் நூல் விலை இன்னும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. எனவே ஒன்றிய அரசு உடனடியாக இதில் தலையீடு செய்ய வேண்டும்.

இறக்குமதி வரியை நீக்குவதுடன், மூலப்பொருள் நிலையில் பஞ்சு, நூல் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் மிகப்பெரிய வர்த்தக சூதாடிகள், இடைத்தரகர்கள் சந்தையில் பஞ்சு, நூல் விலைகளை செயற்கையாக உயர்த்தக்கூடிய சூதாட்ட நடவடிக்கையை தடுத்து நிறுத்தவும், இந்திய பருத்தி கழகத்தின் மூலம் பருத்தி விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைப்பதை உத்தரவாதம் செய்து, ஜவுளித் தொழில் பிரிவினருக்கு சரியான விலையில் பஞ்சு, நூல் விநியோகம் செய்வதையும், உறுதிப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

பட்டியலின மக்கள் மீது சாதிவெறியர்கள் தாக்குதலுக்கு கண்டனம்:

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், வீரளூர் கிராமத்தில் பட்டியலின அருந்ததியர் மக்கள் மயானத்திற்கு செல்வதற்கு பிரதான பொதுச் சாலையை பயன்படுத்த முடியாமல், மிகவும் குறுகலான ஒதுக்குப்புறமான பாதை வழியாக கொண்டு செல்ல வேண்டிய அவலம் இருந்தது. இந்த கொடுமைகளுக்கு எதிராக பட்டியலின மக்கள் தொடர்ந்து போராடி வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் வரை தலையீடு செய்து கடந்த ஜனவரி 12ந் தேதி காவல்துறை பாதுகாப்புடன் நாட்டான் என்பவரது சடலம் முதல் முறையாக எடுத்துச் செல்லப்பட்டது.

இந்நிலையில் கடந்த 15ந் தேதி பட்டியலின வகுப்பைச் சார்ந்த அமுதா என்பவர் மரணமடைய அவரது சடலம் பொதுப் பாதையில் எடுத்து செல்லப்பட இருந்தது. இதற்கான அமைதி பேச்சுவார்த்தை அதிகாரிகள் முன்பு நடந்து கொண்டிருந்த போதே சாதிவெறியர்கள் பட்டியலின மக்களை கேவலமாக பேசி அடித்து விரட்டியதுடன், அவர்களின் குடியிருப்பிற்குள் புகுந்து வீடுகள், வீட்டு உபயோகப் பொருட்கள், இரண்டு சக்கர வாகனங்கள் என அவர்களது உடமைகளையும், சொத்துக்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இத்தாக்குதலில் 7 பேர் மண்டை, கை, கால்கள் ஆயுதங்களால் வெட்டப்பட்டு படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சாதி வெறியர்களின் இந்த காட்டுமிராண்டித்தனமான கொடூரத் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

 பட்டியலின மக்கள் மீது தாக்குதல் தொடுத்த சாதி வெறியர்களை உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமெனவும், தங்களுக்கு எதிரிலேயே வன்முறை தாக்குதல்கள் நடந்த போது அதனை தலையிட்டு தடுக்க தவறிய அதிகாரிகள் மீதும், ஏற்கனவே வன்முறைத் தாக்குதல் தொடர்பான முன்கூட்டியே தகவல் கிடைத்தும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தவறியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திடவும், அடித்து நொறுக்கப்பட்ட பட்டியலின மக்களின் உடமைகளுக்கு உரிய இழப்பீடுத் தொகை வழங்கிடவும், இக்கிராமத்தில் பொதுப்பாதையை பயன்படுத்தும் உரிமையை உறுதி செய்வதோடு, பட்டியலின மக்கள் சுதந்திரமாகவும், ஜனநாயக உரிமையுடனும் வாழ்ந்திட அவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசையும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

;