tamilnadu

ஒரே நாளில் நான்கு பெண்களிடம் நகை பறிப்பு

தேனி, ஏப்.21- தேனி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் கணவருடன் பின்னால் அமர்ந்து சென்ற பெண்களிடம், அடுத்தடுத்து தங்க நகைகள் பறித்துச் செல்லப்பட்டதால் பெண்கள் அச்சத்தில் உள்ளனர் .முத்துத்தேவன்ப ட்டியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி சுமதி (38). இவர், தனது கணவருடன் தேனியில் இருந்து முத்துத்தேவன்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, தேனி-போடி விலக்கு அருகே இவர்களை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர், சுமதி கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டாராம்.இதே போல, அரண்மனைப்புதூரைச் சேர்ந்த பாண்டிச்செல்வி (26), தனது கணவர் சென்றாயப்பெருமாளுடன் இருசக்கர வாகனத்தில் மார்கையன்கோட்டையில் இருந்து அரண்மனைப்புதூருக்குச் சென்றுள்ளார். அப்போது வீரபாண்டி, தேனி-குமுளி சாலையில் இவர்களை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், பாண்டிச்செல்வி அணிந்திருந்த ஆறரை சவரன் எடையுள்ள இரு தங்கச் சங்கிலிகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.


மற்றொரு சம்பவத்தில், வீரபாண்டியில் இருந்து முத்துத் தேவன்பட்டிக்கு தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த மேகநாதன் மனைவி லோகுகவிதா (24) என்பவர் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை, அதே திசையில் இருந்து இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரு நபர்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து சுமதி, பாண்டிச்செல்வி, லோகுகவிதா ஆகியோர் தனித் தனியே அளித்த புகார்களின் மீது, வீரபாண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். பாளையம் கம்பம் பாரதியார் தெருவை சேர்ந்த முருகன், அவரது மனைவி மாலதியுடன் கடமலைக்குண்டுக்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அனுமந்தன்பட்டி அருகே வந்த போது மர்ம நபர்கள் மாலதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தேடிவருகிறார்கள் .வீரபாண்டி பகுதியில் தேனி -குமுளி நெடுஞ்சாலையில், கம்பம் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற நகை பறிப்புச் சம்பவங்கள் இப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

;