tamilnadu

சென்னையில் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் குறைப்பு

சென்னை, மே 14-கடந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடுஏற்பட்டு உள்ளது.சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கிய சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் முழுவதும் வறண்டு விட்டன. பூண்டி, புழல் ஏரிகளில் உள்ள தண்ணீரும் இன்னும்ஒரு வாரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.இதனால் சென்னை நகரில் தண்ணீர் பிரச்சனை விசுவரூபம் எடுத்துள்ளது. ஏரிகளில் நீர் இருப்பு குறைந்ததால் கடந்த மாதம் முதலே வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட மெட்ரோ வாட்டர் பாதியாக குறைக்கப்பட்டது.தற்போது பைப்புகளில் வினியோகிக்கப்படும் தண்ணீர் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். போர்வெல்களில் நீரும் இல்லாததால் லாரி, டிராக்டரில் விநியோகம் செய்யப்படும் தண்ணீரையே எதிர்பார்த்து காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட வட சென்னை பகுதியில் குழாய்களில் தண்ணீர் வருவது நின்று விட்டது.கொளத்தூர் பகுதியில் வாரத்துக்கு ஒருமுறை மட்டும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. பெருங்குடி,பகுதியில் ஒருநாள் விட்டு ஒருநாளும், அம்பத்தூரில் வாரத்துக்கு ஒருநாளும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. கொட்டிவாக்கத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் 2 மணி நேரம், கோடம்பாக்கத்தில் 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வருகிறது.முறையாக குடிநீர் வராததால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பகுதி வாரியாக 800 லாரிகளின் மூலம் 8 ஆயிரத்து 400 முறை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.ரெட்டேரி ஏரியில் இருந்து அடுத்த மாதம் முதல் தண்ணீர் எடுத்து விநியோகம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.மேலும் பெரும்பாக்கம், அயனம்பாக்கம் ஏரி தண்ணீரையும் குடிநீருக்கு பயன்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

;