tamilnadu

முகக்கவசம் உயிர் கவசம்.. சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னை:
முகக்கவசம் உயிர்க் கவசம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையிலும் கடந்த 1 ஆம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.ஊரடங்கு அமலில் இருந்த போதே முகக்கவசம் அணிவதிலும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதிலும் பொதுமக்கள் போதிய அக்கறை காட்டவில்லை. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு வெளியில் சுற்றுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பதில் பொது மக்கள் மேலும் அலட்சியம் காட்டி வருகிறார்கள்.பொதுமக்கள், வியாபாரிகள், தொழில் நிறுவனங்களை நடத்துபவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்துள்ளதாக கூறி இருக்கும் தமிழக அரசு பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருந்தால் மட்டுமே கொரோனாவை விரைவாக ஒழிக்க முடியும் என்று தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் மக்கள் மத்தியில் கொரோனா அச்சம் இல்லை. பொது இடங்களில் அதிகமாக கூடி வருகிறார்கள்.  

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, சுகாதாரத் துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வீடுகளை விட்டு வெளியில் வரும் மக்கள் முகக்கவசம் அணிய மறக்கக் கூடாது. முகக்கவசம் உயிர் கவசம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். முகக்கவசம் அணிவதன் அவசியம் பற்றி தினமும் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.மக்கள் தங்கள் நலன் கருதியும், சுற்றி இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டும் முகக்கவசம் அணிய மறக்கக் கூடாது. கொரோனா விலகும் வரையில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.மழைக்காலம் தொடங்கி இருப்பதால் கூடுதல் கவனம் தேவை. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சிலர் 3 நாட்கள் வரை காத்திருந்து அதன் பின்னரே பரிசோதனைக்கு செல்கிறார்கள்.காய்ச்சல் ஏற்பட்டவுடன் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியமாகும். அதிக அளவில் காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதால் நோய் பரவலை கட்டுப்படுத்த முடிகிறது. பொதுமக்கள் மேலும் ஒத்துழைப்பு அளித்தால் விரைவில் கொரோனாவை விரட்ட முடியும்.அனைவரையும் முகக்கவசம் அணிய செய்து தனிமனித இடைவெளியை பின்பற்றி நடக்க செய்ய வேண்டும் என்பதே அரசின் எண்ணமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

;