tamilnadu

img

தோழர் லெனின் சுந்தர் மறைவு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

வடசென்னை சிஐடியு மாவட்டச் செயலாளர் தோழர் லெனின் சுந்தர் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு உறுப்பினரும், வடசென்னை சிஐடியு மாவட்டச் செயலாளருமான தோழர் லெனின் சுந்தர் (56) அவர்கள் இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

தோழர் லெனின் சுந்தர் அவர்கள் 1988ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தனது இளம் வயதிலேயே வாலிபர் சங்கத்தில் இணைந்து அம்பத்தூர் பகுதியில் வாலிபர் சங்கத்தை கட்டுவதிலும், ஐ.சி.எப். காலனி குட்டை ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், அதையொட்டி மைதானத்தை பாதுகாப்பதற்காகவும் அப்பகுதியில் பெரும் இயக்கத்தை உருவாக்கியவர். கோவை விஜயா கொலைக்கு எதிராக அம்பத்தூரில் நடைபெற்ற பெரும் இயக்கத்தில் பங்கேற்றவர். தோழர் உ.ரா.வரதராசன் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்ட போது முழுமையாக தேர்தல் பணிகளில் பங்கேற்றவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு உறுப்பினர், அம்பத்தூர் பகுதி செயலாளர், மாவட்டக்குழு உறுப்பினர், சிஐடியு மாவட்டச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளிலிருந்த காலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்காகவும், பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களுக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு திறம்பட பணியாற்றியவர். மார்க்சிய சித்தாந்தத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பு கொண்டவர். அவருடைய மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், உழைக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு தனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது.

அவரது மறைவால் துயருற்றுள்ள அன்னாரது மனைவி, மகள், மகன் மற்றும் குடும்பத்தினருக்கும், வடசென்னை மாவட்ட தோழர்களுக்கும் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.