tamilnadu

img

கொரோனாவால் உயிரிழப்பு.... புகளூர் காகித ஆலை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடுக... முதல்வருக்கு முன்னாள் எம்.பி., டி.கே.ரங்கராஜன் வேண்டுகோள்.....

சென்னை:
புகளூர் காகித ஆலையில் கொரோனாவால்  உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று  தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலினுக்கு டிஎன்பிஎல் தொழிலாளர் சங்க கெளரவ  ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான  டி.கே.ரங்கராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கரூர் மாவட்டத்தில் இயங்கி வருகின்ற  புகளூர், மொண்டிப்பட்டி காகித ஆலைகள் மற்றும் புகளூர் சிமென்ட் ஆலைகளில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான நிரந்தர, ஒப்பந்தத்தொழிலாளர்கள், சிப்பந்திகள்,அதிகாரிகள் பணியாற்றி வருகின்றார்கள். தொடர்பணியில் இந்த ஆலைகள் இயங்கி வருவதால் கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்திலிருந்து இதுவரை200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

தற்போதும் பலர்மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .கடந்த 14.05.2021 அன்று கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட குமார் என்கின்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தொழிற்சங்கங்கள் இறந்து போன  தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும்  உரிய நஷ்டஈடும்கேட்டு கோரிக்கை வைத்தபோது நிர்வாகம் அதனை பரிசீலிப்பதாக உறுதி அளித்திருந்தது.இந்நிலையில் மீண்டும்1.6.2021 அன்று முத்தமிழ்செல்வன் என்ற தொழிலாளி கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளார். இந்த தொடர் மரணங்களால் தொழிலாளர்கள் மத்தியில் கடும் அச்சத்தையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.எனவே, தமிழக முதலமைச்சர் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு கீழ்க்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட கேட்டுக்கொள்கிறோம்.-கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உரிய நஷ்டஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும். 

டி.என்.பி.எல். காகித ஆலையில் கொரோனா நோயைக் கட்டுப்படுத்திட உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.-தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை நிர்வாகம் உறுதி செய்திட வேண்டும்.மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு புகளூர் காகித ஆலை தொழிலாளர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் பாதுகாத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;