tamilnadu

சாதிய மோதல் அபாயத்தில் கடலூர் மாவட்டம்

கடலூர், ஏப். 22-தேர்தலுக்கு பிறகு நடந்த சில சம்பவங்களின் தொடர்ச்சியாக சாதிய மோதல்கள் ஏற்படும் அபாயம்கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகள் திடீரென மூடப்பட்டன.கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 18 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. தேர்தலை முன்னிட்டே பல்வேறு இடங்களில் பாமகவினர் கலவரத்தில் ஈடுபடுவதாககவும், தாழ்த்தப்பட்ட மக்களேடு மோதிக் கொள்ளும் நிலை உருவானது. தேர்தல் முடிந்த பின்னரும் இந்த நிலை மாறாமல் பல்வேறுஇடங்களிலும் இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு தற்போதுஅது ஜாதிய மோதலாக உருவெடுத்து வருகிறது.இதுதொடர்பாக, இரு கட்சியினரும் தனித்தனியாக புகார் அளித்துள்ள நிலையிலும் மோதல் போக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நெல்லிக்குப்பம் அருகேவீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு,வடலூர் அருகே ராசாக்குப்பத்தில் தேமுதிக பிரமுகர் வெட்டிக்கொலை,சிறீமுஷ்ணம் மங்காகுளத்தில் இருதரப்பினர் மோதல், பெண்ணாடம் அருகே சௌந்திர சோழபுரத்தில் இருகட்சியினர் இடையே மோதல், தமிழ்குச்சிப்பாளையம், சுந்தரவாண்டியில் மோதல் ஆகிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாகவும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், சமுதாயத்தினரி டையே மோதலை உருவாக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிடுவதும் நடந்து கொண்டிருக்கிறது.


இவ்வாறு, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் தேர்தல் தொடர்பான முன்விரோதம் தொடர்கதையாக வெவ்வேறு வடிவத்தில் தொடர்கிறது. இந்த மோதல் போக்குகள் பெரும்பாலும் மதுபோதையாலும், சிலரின் திட்டமிட்ட செயல்களாலுமே நடைபெற்று வருவதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. எனவே, இத்தகைய போக்கினை கட்டுப்படுத்திட மாவட்டகாவல்துறை முடிவெடுத்து முதற்கட்டமாக டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவதற்கு முடிவெடுத்தது. அதன்படி, மாவட்டத்தில் பிரச்சனைக்குரிய பகுதிகளாக கருதப்படும் திட்டக்குடி,பெண்ணாடம், காட்டுமன்னார்கோயில், நெல்லிக்குப்பம் பகுதிகளில் சனிக்கிழமையன்று பெரும்பாலான டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்பட்டன. ஞாயிற்றுக்கிழமையன்றும் இக்கடைகள் மூடப்பட்டதோடு, கடலூர் முதுநகர் பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டன.மாவட்டத்தில் 141 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில் கடந்த 2நாட்களாக சுமார் 50 கடைகள் அடைக்கப்பட்டிருப்பதாக டாஸ்மாக்வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், பெரும்பாலான பிரச்சனைகள் டாஸ்மாக் கடைகளில் உருவாகியே கட்சி, ஊர், சாதிப் பிரச்சனையாக வெடித்து வருகிறது. இதனைத் தடுத்திட பிரச்சனைக்குரிய டாஸ்மாக்கடைகளை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக அடைத்திட காவல் ஆய்வாளர்கள் மூலமாக டாஸ்மாக் மேற்பார்வையாளரை வலியுறுத்தி அடைத்து வருகிறோம். பிரச்சனைகள் தீரும் வரையில் இந்த நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்தனர்.எனவே, மாவட்ட நிர்வாகமும் மாவட்டத்தில் சுமூக நிலை ஏற்பட உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.

;