மக்களுக்கான மருத்துவ சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும், மருத்துவர்கள் தின (ஜூலை 1) வாழ்த்துகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. நாட்டின் பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவத்தை மேம்படுத்துவது, மக்களுக்கான ஆரோக்யமான வாழ்வை உறுதி செய்வது ஆகியவற்றில் மருத்துவர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். மக்களுக்கான மருத்துவ சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் மருத்துவர்கள் நாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தோழமை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதோடு, தொடர்ச்சியாக தேசிய அளவில் விருதுகளை வாங்கி சாதனை படைத்து வருகிறது. இதற்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாக பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354 ன் படி ஊதிய மாற்றத்தை அமலாக்குவதென்பது ஏற்கனவே தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கை ஆகும். எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஊதிய உயர்வை அமலாக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
மேலும், நோயாளிகள் மருத்துவர்கள் விகிதத்தை கணக்கில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் கூடுதலான மருத்துவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும், கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த அசாதாரண சூழலில், அரசுக்கு உறுதுணையாக இருந்த அரசு மருத்துவர்கள் பணி மகத்தானது என முதல்வர் அவர்களே நேரடியாக பாராட்டிய நிலையில் கொரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்குவது எனும் கோரிக்கையும் அமலாக்கப்படாமல் நிலுவையில் உள்ளது என்பதையும் கவனப்படுத்துவதுடன் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.