tamilnadu

img

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 621 ஆனது... 91,851 பேர் தனிமையில்....  சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் பேட்டி

சென்னை
கொரோனா தொற்று யாருக்கு வேண்டுமானாலும் பரவலாம்.  அதை யாரும் விரும்பி வரவேற்பதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவது கட்டாயம். அவர்களை யாரும் வெறுக்க வேண்டாம் என மக்களுக்கு சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் அறிவுரை கூறினார்.

திங்களன்று தமிழக்தில் கொரோனா பரவல் குறித்து அவர் கூறியதாவது," தமிழகத்தில் ஞாயிறுவரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 571 ஆக இருந்தது. திங்களன்று ஒரே நாளில் 50 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 621 ஆக அதிகரித்துள்ளது. 50 பேரில் 48 பேர்  ஒரு மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். இருவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

தமிழகம் முழுவதும் 91,851 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரசு கண்காணிப்பில் 205 பேர் உள்ளனர். 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து 19,060 பேர் வீடு திரும்பியுள்ளனர். ஒரு மாநாட்டிற்கு சென்று வந்தவர்களின் 1,475 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதில் 573 பேருக்கு தொற்று உள்ளது. 855 பேருக்கு தொற்று இல்லை. கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து இதுவரை 104 எண்ணிற்கு 17,851 அழைப்புகள் வந்துள்ளன.  மற்ற எண்களுக்கு 19,787 அழைப்புகள் வந்துள்ளன.

கடந்த மார்ச் 20-ஆம் தேதி திருச்சி சென்று திரும்பிய 57 வயதுள்ள ஒரு பெண் ஞாயிறன்று இரவு கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திங்களன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் உயிரிழப்பு 6 ஆக அதிகரித்துள்ளது. கொரோனோ சோதனைக்காக 21 கருவிகள் வந்துள்ளன. அவற்றை சென்னை பொருத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
கொரோனா எல்லோருக்கும் பரவலாம். யாரும் அதை விரும்பி வரவேற்பதில்லை. தொற்றுள்ளவர்கள் யாரையும் நாம் வெறுக்கக் கூடாது என்றார்.

தினம்தோறும் செய்தியாளர்களை சந்திக்கும் ராஜேஷ் "தில்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களுக்கு கொரோனா தொற்று"  உள்ளது என அழுத்தம் திருத்தமாகக் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார். திங்களன்று "தில்லி மாநாடு" என்பதை தவிர்த்து "ஒரு மாநாடு" எனக் கூறினார்.
 

;