tamilnadu

img

வேளாண், தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெறு... சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு விவசாயிகள்-தொழிலாளர்கள் தர்ணா.... விவசாயிகளை சந்திக்க மறுத்த ஆளுநருக்கு கண்டனம்....

சென்னை:
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி சனிக்கிழமைன்று (ஜூன் 26) ஆளுநர் மாளிகை அருகே விவசாயிகள் - தொழிலாளர்கள் இணைந்து தர்ணா நடத்தினர்.விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் திருத்த சட்டங்கள், மின்சாரதிருத்த மசோதா-2020, தொழிலாளர் களுக்கு விரோதமான 4 சட்டத் தொகுப்புகள் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்த சட்டம் இயற்றவேண்டும், கருத்துரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகள் பறிப்பதை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும்ஆளுநர் மாளிகைகள் முன்பு போராட் டங்கள் நடைபெற்றன.

அதன் ஒருபகுதியாக சென்னையில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவும், ஒன்றிய தொழிற்சங்கங்களும் இணைந்து இந்ததர்ணாவை நடத்தின.இந்தப் போராட்டத்திற்கு தலைமைதாங்கிப் பேசிய போராட்ட ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், “இந்தியாவில் 50 சதவீத மக்களை பாதிக்கும் வகையில் 3 வேளாண் சட்டங்கள், நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் நடைபெறும் போராட்டம் 7 மாதத்தை கடந்துள்ளது.550க்கும் மேற்பட்டோர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.விவசாயிகளை, தொழிலாளர் களை நசுக்கும் பாஜக-வை ஆட்சியைவிட்டு விரட்ட பிரச்சாரம் மேற்கொண் டோம். அண்மையில் நடைபெற்ற 5 மாநிலத்தேர்தல்களில் பாஜகவை தோற்கடித்தோம். விரைவில் நடைபெற உள்ள உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மாநில தேர்தல்களிலும் தோற்கடிப்போம்” என்றார்.

காவல்துறையால் அவப்பெயர்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், “நாட்டில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட தினம், தில்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கிய நாள்,விவசாயிகள் சங்கத் தலைவர் தயானந்த சரஸ்வதி நினைவு நாள் ஆகியவற்றை முன்னிட்டு “விவசாயத்தைப் பாதுகாப்போம்! ஜனநாயகத்தை பாதுகாப்போம்”  என்ற முழக்கத்தோடு இந்தபோராட்டம் நடைபெறுகிறது. சட்டங் கள் வாயிலாக விவசாயிகளையும் தொழிலாளர்களையும் ஆட்சியாளர்கள் ஒடுக்குகின்றனர். அரசுக்கு எதிராக கருத்து சொன்னால் உபா எனும்கொடிய சட்டத்தில் கைது செய்கின்றனர். இதற்கெதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது” என்றார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகசட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றமுதமைச்சரின் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்த சண்முகம், “இன்றைய போராட்டத்திற்கு காவல்துறை ஏகப்பட்ட கெடுபிடிகளை செய்தது. காவல்துறையின் அணுகுமுறையில் மாற்றம் தேவை. அரசு சிறப்பாக செயல்பட்டு திட்டங்கள், சட்டங்களை கொண்டு வந்தாலும்,காவல்துறையின் அணுகுமுறையால் அரசுக்கு அவப்பெயர்தான் உருவாகும். கொரோனாவை கட்டுப்படுத்த கவனம் செலுத்திய முதலமைச்சர், காவல்துறையின் அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவரவும் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

அறிவிக்கப்படாத அவசர நிலை
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், “பாஜக ஆட்சியில் அரசியல் சட்ட ரீதியாக மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் அறிவிக்கப்படாத அவசரநிலை அமல்படுத்தப்பட் டுள்ளது. லட்சத்தீவில் குற்றம் இல்லாதஇடத்தில் குண்டாஸ் சட்டம் கொண்டு வருகிறார்கள். ஜம்மு - காஷ்மீரின் அந்தஸ்தை ரத்து செய்ததோடு, சின்னஞ்சிறிய லட்சத்தீவில் தேவையற்றதை செய்கிறார்கள். அதை தற்காலிகமாக நீதிமன்றம் தடுத்துள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக உருவாக்கியுள்ள வெறுப்பரசியலால் மக்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் எனநினைத்தனர். அதனை ஜனநாயக சக்திகள் முறியடித்துள்ளன” என்றார்.

“விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகிய இரு வர்க்கத்தையும் ஒடுக்க ஆட்சியாளர்கள் சட்டங்களை கொண்டு வந்துள்ளனர். விவசாயிகளை நிலமற்றவர்களாக மாற்றவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பாஜகஆட்சியை அகற்ற உள்ள எந்த ஒருவாய்ப்பையும் விட்டுவிடக் கூடாது.அதற்கேற்ப பிரச்சாரம் மேற்கொண் டுள்ளோம். எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள 12 மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஒன்றிணைந்து ஒன்றியபாஜக அரசிற்கு எதிராக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு தொழிலாளி-விவசாயி வர்க்கம்தோள்கொடுக்கும்” என்றும் அவர் கூறினார்.

ஆளுநருக்கு கண்டனம்
ஆளுநரை சந்திக்க அனுமதி கோரிபோராட்டக்குழு சார்பில் கடந்த 22ஆம்தேதியே மனு கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சந்திக்க அழைப்பது அல்லது அனுமதி மறுப்பது குறித்து எந்தஒரு தகவலையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இதற்கு போராட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் பதவி விலகக்கோரி விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என்றுதலைவர்கள் அறிவித்தனர்.இந்தப்போராட்டத்தில் வே.துரைமாணிக்கம், குணசேகரன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்), கி.நடராஜன் (எல்பிஎப்), டி.எம்.மூர்த்தி (ஏஐடியுசி) உள்ளிட்டு பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பேசினர்.

;