tamilnadu

img

என்எல்சி நிறுவனத்தின் இயக்குநர் மீது ஊழல் புகார்...

சென்னை:
என்எல்சி நிறுவனத்தின் இயக்குநர் மீது ஊழல் புகார் எழுந்துள்ள நிலையில், சிபிஐ மற்றும் சிவிசி  உடனடியாக விசாரணை நடத்தி  நடவடிக்கை  எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கடலூர் மாவட்டம் நெய்வேலியிலும்,  இந்தியாவின் பிற மாநிலங்களிலும் செயல்பட்டுவரும் மத்திய பொதுத்துறை நிறுவன மான என்.எல்.சி. யில்  நிரந்தர தொழிலாளர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என சுமார் 30,000 பேர் பணியாற்றி வருகிறார்கள். அனல் மின்நிலையம், சூரிய ஒளி, காற்றாலை ஆகியவற்றின் மூலம் சுமார் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து, ஆண்டுக்கு ரூபாய் 1,000 கோடி லாபம் ஈட்டும் நவரத்னா நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. சமீப நாட்களில்  இந்நிறுவனத்தை பற்றி வரும் செய்திகள் கவலை அளிப்பதாக உள்ளன.

நிறுவனத்திற்கான புதிய பொறியாளர்கள், அதிகாரிகளைத் தேர்வு செய்வது, பதவி உயர்வு அளிப்பது, வீடு பராமரிப்பு, தொலைபேசி பயன்படுத்தியது ஆகியவற்றில் ஊழல், முறைகேடு நடந்துள்ளதாகவும், இதில் மனிதவள துறை இயக்குநர் ஆர்.விக்கிரமன் அவர்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் குற்றம் சாட்டி அந்நிறுவனத்தில் பணியாற்றும் முதன்மை பொதுமேலாளர் சி.துரைக்கண்ணு என்பவர் சிபிஐ, மத்திய கண்காணிப்பு ஆணையம்  (CVC) துறைகளுக்கு புகார் மனு கொடுத்துள்ளார்.ஒரு நிறுவனத்தின் இயக்குநர் மீது அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் புகார் அளித்திருப்பதும், அதற்கு ஆதாரம் இருப்பதாக கூறியிருப்பதும், இவரது நடவடிக்கைகளை  விரும்பாத  நேர்மையான  அதிகாரிகள், ஊழியர்களை  இவர்  பழிவாங்குவதாக  வருகிற தகவல்களும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

மேலும் இது குறித்த புகாரை விசாரித்திட சமூக செயற்பட்டாளர்கள் நால்வர் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எளிதில் ஒதுக்கி விடக்கூடிய குற்றச்சாட்டாக தெரியவில்லை. எனவே நவரத்னா அந்தஸ்து பெற்ற தமிழகத்தின் மிக முக்கிய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் மீது கூறப்பட்டுள்ள புகாரை  சிபிஐ மற்றும் சிவிசி அமைப்புகள் தாமதமின்றி  வலுவான, ஆழமான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நிறுவனத்தின் உள்ளிருந்தே  இப்படிப்பட்ட முறைகேடுகளை  அம்பலப்படுத்தும் அதிகாரிகள்,  ஊழியர்களை  பாதுகாப்பதற்கான  நடவடிக்கை எடுக்க வேண்டும் (Whistle powers Protection) எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

;