கிருஷ்ணகிரி, ஆக. 7- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள பர்கூர், நாகஜோனஅள்ளி, மத்தூர், ஆனந்தூதூர் சாமல் பட்டி, போச்சம்பள்ளி, பாரூர், கிருஷ்ணகிரி வட்டத்தில் காவேரிப் பட்டிணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கர் பரப்பில் தென்னந் தோப்புகள் உள்ளன. சிறிதும் பெரிதுமாக 1,500 விவசாயிகள் இதில் ஈடு பட்டுள்ளனர். இதுகுறித்து மேல் சங்கம்பட்டியை சேர்ந்த சங்கர் கூறியதாவது: தமிழகத்தில் பாரம்பரியமாக இப்பகுதி தேங்காய்க்கு பெயர் பெற்றது. மற்ற மாவட்ட தேங்காய்களை விட அளவில் பெரியது. அதனால் தான் “பாரூர் தென்னை மரம் வானத்துக்கே போய் வரும்” என நமது தகடூர் கவிஞர் நவகவி 25 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருந்தார். ஆனால் கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது முதல் தேங்காய் விற்பனை யும், விலையும் கடுமையாக வீழ்ச்சிய டைந்துள்ளன. தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை, தேன் பூச்சிகளை அழிக்கும் மருந்து வாங்க தேனி, நாகர்கோவில் செல்ல வேண்டும். தென்னை மரத்திற்கும், தேங்காயிக்கும் அடிக்கடி புதுப்புது நோய்கள் வருகின்றன. அவற்றை தடுக்க தேவையான மருந்துகள் அரசு வேளாண் மருந்துக் கடைகளில் விற்பதில்லை. இதனால் தனியார் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கி அடிக்க வேண்டியுள்ளது. சில நேரம் 1 வருடம் கூட தொடர்ந்து மருந்தடிக்க வேண்டியுள்ளது. அரசு மானியமும் வழங்குவதில்லை. தென்னை விவசாயிகள் என்ன செய்வது என தெரியாமல் திகைப்பிலும் வேதனையிலும் உள்ளனர். 8 ஏக்கர் நிலத்தில் உள்ள தென்னை மரங்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குறைந்தது 10,000 தேங்காயாவது கிடைக்க வேண்டும்.
40 மரங்கள் ஏறினால் 800 ரூபாய் கூலி வழங்க வேண்டும். தேங்காய் மட்டை உரிக்க 100க்கு 80 ரூபாய் செலவாகிறது. பிடுங்கிப் போடப்படும் தேங்காய்களை சேகரித்து குவிப்பவர்களுக்கும், உரித்த மட்டைகளை ஓரிடத்தில் குவிக்கவும் தனித்தனியாக கூலி வழங்க வேண்டும். மேலும் 100 தேங்காய்க்கு 20 காய்கள் இலவசமாக வழங்க வேண்டும். கொரோனா பொதுமுடக்கத்திற்கு முன், முதல் தரம் 15 முதல் 20 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது முதல் தரம் 10 ரூபாய் முதல் 12 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 8 முதல் 10 ரூபாய் வரையும், கடைசி தரம் 5 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மட்டையை கயிறு திரிக்கவும், கடைசி தூள் கோழிகளுக்கு உணவாக கோழி பண்ணைகளுக்கு விற்கப்படும். அரசம்பட்டி, உள்ளுர் செல்லம்பட்டி, நாகரசம்பட்டி மொத்த வியாபாரிகள், சில மாவட்டங்களின் வியாபாரிகள் முன்கூட்டியே சொல்லி வைத்து மொத்தமாக வாங்கிச் சென்று விடுவார்கள். அதனால் எங்களுக்கு சிரமம் இருக்காது. ஆனால் தற்போது வாகனங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் உள்ளதாலும், விழாக்கள், விசேசங்கள் எதுவும் இல்லாத நிலையில் மொத்த வியாபாரத்திற்கே யாரும் வருவதில்லை. இதனால் தேங்காய்கள் தேங்கிக் கிடக்கின்றன. எனவே அரசே கட்டுபடியான விலைக்கு தேங்காய்களை நேரடியாக கொள்முதல் செய்தால் தென்னை விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்றார். அரசே விவசாயிகளிடம் தேங்காய்களை நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், மானிய விலையில் தென்னைக்கான மருந்துகள், உரங்கள் வழங்க வேண்டும், கொரோனா பொதுமுடக்க காலத்தில் தென்னை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அனைத்து தென்னை விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.