புதுச்சேரி, ஜூலை 1- இணையதளம் மூலம் குடியிருப்பு, சாதி, வருமான சான்றுகள் வழங்கும் திட்டம் புதுச்சேரியில் துவக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் குடியிருப்பு, குடியுரிமை, சாதி மற்றும் வருமான சான்றிதழ்களை மின் மாவட்டம் திட்டத்தின் கீழ் இணைய வழியாக வழங்கிடும் சேவையின் தொடக்கவிழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று (ஜூலை 1) நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி துவக்கி வைத்தார். இதில் தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், அரசு செயலர் அசோக்குமார், மாவட்ட ஆட்சியர் டாக்டர். அருண் உள்ளிட்ட அதிகாரிகள், வருவாய்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் இச்சேவையை பெற https:edistrict.py.gov.in என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் பொது சேவை மையங்களிலும் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது சேவை மையம் மூலமாக விண்ணப்பிப்பதற்கு கட்டணமாக சான்றிதழ் ஒன்றுக்கு ரூ.25 மற்றும் ஆவணங்கள் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய பக்கம் ஒன்றுக்கு ரூ.2 என நிர்ணயிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் கணினி, கைபேசி மூலமாகவும், மாணவர்கள் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் இல்லை. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதற்கான குறுஞ்செய்தி விண்ணப்பதாரரின் கைப்பேசிக்கு வந்து சேரும். கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் இணைய விண்ணப்பத்தை ஆய்வு செய்து ஒப்புகை அளித்தவுடன், சான்றிதழ்களை பொது சேவை மையங்கள் அல்லது கைபேசி மூலமாக பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று வருவாய்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருவாய்துறை அதிகாரிகள் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.