tamilnadu

img

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-ஐ ரத்து செய்க... விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

சென்னை:
குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள் தொகை பதிவேடு(என்பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி சனிக்கிழமையன்று (பிப்.22) திருச்சியில் “தேசம் காப்போம்” பேரணி நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்  தலைமையில் நடைபெற்ற இந்தப்பேரணியில், பொதுச் செயலாளர்கள் து.ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச்செல்வன் உள்ளிட்டு  பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பேரணியின் இறுதியில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாக இருப்பதோடு இந்திய மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துகிறது. இந்த சட்டத்தை ஆதரித்த கட்சிகள், தற்போது தமது நிலையை மாற்றிக்கொண்டுள்ளதோடு, எதிர்க்கவும் செய்கின்றனர். கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்டு பல மாநிலங்கள் இந்தசட்டத்தை எதிர்த்து சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இந்தியாவின் மக்கள் தொகையில் பெரும்பாலான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே, மக்களின் உணர்வுகளையும், மாநில அரசுகளின் தீர்மானங்களையும் மதித்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

2020 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30வரையிலான காலத்தில் இந்தியா முழுவதும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (என்பிஆர்) கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்று மத்தியஅரசு அறிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் 2003 இன் கீழ் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த கணக்கெடுப்பு எடுக்கும்அலுவலர், ஒருவரை சந்தேகத்துக்குரிய குடிமகன் என்று அறிவிக்க முடியும். இத்தகைய கணக்கெடுப்பை மேற்கொள்ள மாட்டோம் என பல மாநில அரசுகள் அறிவித்துள்ளன. எனவே, தமிழக அரசும் என்பிஆர்கணக்கெடுப்பை மேற்கொள்ளமாட்டோம் என அறிவிக்க வேண்டும்.தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (என்பிஆர்) எடுக்கப்பட்டு விட்டால் அதன் அடுத்தகட்டம் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிப்பதுதான். என்பிஆரில் சந்தேகத்துக்குரிய குடிமகன் என்று குறிப்பிடப்பட்டவருக்கு குடியுரிமை கொடுப்பதா இல்லையா என்பதை இறுதியாகத் தீர்மானிப்பதுதான் என்ஆர்சி. ஒருவர் தமது குடியுரிமையை நிரூபிக்க தவறினால் அவரை தடுப்பு முகாமுக்கு அனுப்பப்படுவார்கள். எனவே, என்பிஆர் தயாரிக்க மாட்டோம் என்று மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

இடஒதுக்கீடு
உத்தர்கண்ட் மாநில அரசு சார்பில்தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என எந்த ஒரு கட்டாயமும் அரசாங்கத்துக்கு இல்லை. உத்தரிட நீதிமன்றத்திற்கும் கட்டாயம் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்த தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டையும் ஒழிக்கவே உதவும். இந்த தீர்ப்புஅரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எனவே, இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க புதிய சட்டம் கொண்டு வந்து,அரசியலமைப்புச் சட்டத்தில் ஒன்பதாவது அட்டவணையில் அதைச் சேர்க்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுஒன்றை உடனடியாக மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்.நீதிபதிகளின் நியமனம் தொடர்பாக தற்போது பின்பற்றப்படும் ‘கொலேஜியம்’ முறை குறிப்பிட்டஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் நீதிபதிகளாக வருவதற்கு வழிவகுத்துள்ளது. இது சமவாய்ப்பை மறுக்கிறது.எனவே சமத்துவத்தை உறுதிசெய்வதாகவும், தற்போது பெரிதும் புறக்கணிக்கப்பட்டிருக்கிற தலித்துகள், பெண்கள் ஆகிய பிரிவினர் தமக்குரிய பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு வழிசெய்வதாகவும் நீதிபதிகள் நியமன முறை ஒன்றைப் புதிதாக  உருவாக்கவேண்டும்.இவ்வாறு அந்த தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளது.

;