tamilnadu

புதிய தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ள ஐடிஐ மாணவர்களுக்கு பேட்டரி கார்கள்

சென்னை:
தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 3 அரசு ஐடிஐகளுக்கு ரூ.33 லட்சத்தில் நவீன பேட்டரி கார்கள் வழங்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டையில் அரசு ஐடிஐக்கள் இயங்கி வருகின்றன. இங்கு பிட்டர், பிளம்பர், இயந்திரவியல், வெல்டர், பயர் அண்டு சேப்டி, ஆட்டோமொபைல், ஏசி மெக்கானிக் போன்ற பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்ப தொழில் கல்வி பயிலும் ஐடிஐ மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக தலா ரூ.11 லட்சம் மதிப்பிலான 3 பேட்டரி கார்கள் அரசால் வழங்கப் பட்டுள்ளன.இதுகுறித்து, விருதுநகர் அரசு ஐடிஐ முதல்வர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஆட்டோ மொபைல் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக பொறியியல் கல்லூரிகளுக்குக்கூட இதுவரை வழங்கப்படாத நவீன தொழில் நுட்பம் கொண்ட பேட்டரி கார்கள் அரசு ஐடிஐக்கு வழங்கப் பட்டுள்ளன.தமிழகத்தில் உள்ள 53 அரசு ஐடிஐகளுக்கும் இந்த பேட்டரி கார்கள் வழங்கப்பட்டுள்ளன. திறன்மிக்க லித்தியம் பேட்டரியால் இயங்கும் இந்த கார்களை சாதாரணமாகவும், விரைவாகவும் சார்ஜ் ஏற்றும் வசதிகளோடு அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சம் கி.மீ. பயன்பாடு வரை இந்த பேட்டரிகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்த வகை கார்கள் இதுவரை வெளி சந்தைக்கு வரவில்லை என்றாலும் பேட்டரி கார்களின் நவீன தொழில்நுட்பம் குறித்து ஐடிஐ மாணவர்கள் அறிந்துகொள்ளச் செய்வதற்காகவே அரசு இக்கார்களை வழங்கியுள்ளது.இனி வரும் காலங்களில் இதுபோன்ற பேட்டரி கார்களின் பயன்பாடு அதிக அளவில் இருக்கும் என்பதால், இப்போதே அதற்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்த முடியும். இதன் மூலம் தனியார் நிறுவனங்களில் நல்ல ஊதியத்தில் பணி வாய்ப்பும் கிடைக்கும்.மேலும், தென் மாவட்டங்களில் முதன் முறையாக விருதுநகர் ஐடிஐயில் இன்டீரியர் டிசைன் அண்டு டெக்கரேசன் பயிற்சி வகுப்பும் தொடங்கப்பட உள்ளது 
என்றார்.

;