tamilnadu

img

ஆட்டோ தொழிலாளர்கள் போராட்டத்திற்கு வெற்றி....

சென்னை:
மாநிலம் தழுவிய அளவில் ஆட்டோ ஓட்டுநர்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால் மக்களும் தொழிலாளர்களும் வருமானமின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அவதிப்படும் ஆட்டோ தொழிலாளர்கள், ஆட்டோ இயக்க அனுமதி வேண்டும். நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை முன்வைத்தனர். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த ஆட்டோ தொழிலாளர்கள் ,சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் தலைமையில் மே 21 அன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து  மே 23 ஆம் தேதி முதல்  தமிழகத்தில் சென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஆகிய வாகனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.ஆட்டோக்களை  இயக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும்  அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
சென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஆகிய வாகனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில் மே 23 ஆம் தேதி முதல் (தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும்) இயக்க அனுமதிக்கப்படுகிறது.நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஆகியவற்றை இயக்க அனுமதி இல்லை. அப்பகுதிகளில் வாழும் ஆட்டோ/ரிக்‌ஷா ஓட்டுநர்களுக்கும் இந்த வாகனங்களை ஓட்ட அனுமதி இல்லை.பயணிகள் பயன்படுத்தும் வகையில் வாகனங்களில் சானிட்டைசர்களை ஓட்டுநர்கள் வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர்களும், பயணியர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும், ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஆகியவற்றை தினமும் மூன்று முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

ஓட்டுநர்கள் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவியும், வாகனத்தில் சுகாதாரத்தையும் பேண வேண்டும். கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, பொது மக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விமான சேவை  வேண்டாம்: முதல்வர் கடிதம்
மே  25ஆம் தேதி முதல் தமிழகத்தில் விமான  சேவை தொடங்க வேண்டாம் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டடுள்ளன. இந்தநிலையில் மே 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி  அறிவித்தார். உள்நாட்டு விமான சேவையில் சென்னை, கோவையில் இருந்தும் விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம் என்றும்  ஜூன் மாதத்திற்கு பிறகு தொடங்கலாம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

;