tamilnadu

img

ரூ.1650 கோடி நிலுவை தொகையை கேட்டு தமிழகம் முழுவதும் ஓய்வூதியர்கள் போராட்டம்

சென்னை:
ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு போக்குவரத்து கழகங்கள் தர வேண்டிய நிலுவைத் தொகை 1650 கோடி ரூபாயை வழங்கக் கோரி செவ்வாயன்று (செப்.15) தமிழகம் முழுவதும் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களில் 83,331 ஓய்வூதியர்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக பணியிலிருந்து ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பயன்களை முறையாக வழங்காமல் நிர்வாகம் அலைக்கழித்து வருகிறது. மாநில அரசு, மின் வாரியம் போன்றவற்றில் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்குள்ளாக பணப் பயன்கள் வழங்கப்படுகின்றன.  போக்குவரத்து கழக ஊழியர் களுக்கு மட்டும் அவ்வாறு வழங்காமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.இதனைக் கண்டித்து தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் சார்பில் கழக, கோட்ட அலுவலகங்கள், பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னை மாநகர போக்குவரத்து கழக தலைமையகமான பல்லவன் இல்லம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப்போராட் டத்தினிடையே செய்தியாளர்களிடம் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கே.கர்சன் கூறியதாவது:

போக்குவரத்து கழகத்தில் 2019 ஏப்ரல் முதல் 2020 ஏப்ரல் மாதம் வரை 6222 பேர் (சென்னையில் மட்டு 1523பேர்) ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக் கொடை, ஓய்வூதிய ஒப்படைப்பு, விடுப்பு சம்பளம் என 1654 கோடி ரூபாய் பணப்பயன்களை கழகங்கள் வழங்காமல் உள்ளன. அவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.59 மாதங்களாக வழங்காமல் உள்ள அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த உயர்வை ஓய்வூதியத்தில் இணைக்க வேண்டும். ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வூதிய சீரமைப்புக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.கடந்தாண்டு செப்டம்பர் மாதம் போக்குவரத்து துறைச் செயலாளர் எழுத்துப்பூர்வமாக ஒப்புக் கொண்டபடி, ஓய்வூதியர்களுக்கென்று தனி மருத்துவ காப்பீடு திட்டத்தை உருவாக்க வேண்டும், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தவேண்டும். அகவிலைப்படி பிரச்சனைக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும் என்று கூறி ஒருவருடமாகிறது. எனவே, அகவிலைப்படி பிரச்சனையை விரைந்து தீர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை கிளை தலைவர் நீலமேகம் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் வீரராகவன் உள்ளிட்டோர் பேசினர்.

;