tamilnadu

img

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஒரே நாளில் தேர்தல் நடத்துக.... தேர்தல் ஆணையக்குழுவிடம் சிபிஎம் தலைவர்கள் வலியுறுத்தல்....

சென்னை:
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஒரே நாளில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையஅதிகாரிகளிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்தது. பிப்ரவரி 10 புதன்கிழமையன்று தமிழகம்வந்திருந்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, சுசில் சந்திரா மற்றும் மத்தியதேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள்மாநிலங்களவை குழு தலைவருமான  டி.
கே.ரங்கராஜன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுக நயினார் ஆகியோர்  சந்தித்து கட்சி சார்பிலான  பரிந்துரைகளை சமர்ப்பித்து நடைபெறவுள்ள 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அமலாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, உரையாடினர். 

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பணபலம் என்பது மிகக்கடுமையான முறையில் செல்வாக்கு செலுத்தும் என்றும், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் புகார்களின் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தேர்தல் முறைகேடுகளை தடுத்து நிறுத்துவதற்கு 234 தொகுதிகளிலும் பிற மாநிலங்களிலிருந்து கூடுதல் கண்காணிப்பு அதிகாரிகளை வரவழைத்து நியமிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையக்குழுவிடம் வலியுறுத்திய மார்க்சிஸ்ட் 
கட்சி தலைவர்கள், தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒருகட்சியின் முக்கியத் தலைவர் வருவதாக இருந்தால், மற்ற கட்சிகளுக்கு அப்பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிப்பதுஇல்லை என்ற நிலை நிறுத்தப்பட வேண்டும்; அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான பிரச்சார வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் எழுப்பப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்றப்படும்போது, வாக்குப்பதிவு முடிந்த வுடனே, வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு முன்பு அந்த அதிகாரிகளை அதே இடத்தில்அமர்த்துவது கூடாது என்றும் வலியுறுத்திய மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, மதுரையில் தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் மீது புகார் எழுந்து தொடர் முறையீடுகளின் பின்னணியில் அவர் மாற்றப் பட்டார்; ஆனால் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடனே மீண்டும் அதே பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இது வாக்கு எண்ணிக்கை யில் முறைகேடு நடப்பதற்கே வழிவகுக்கும் என்று மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியது. தேர்தல் ஆணையம் பரிசீலிக்க மறுத்தது. மார்க்சிஸ்ட் கட்சி கூறிய படியே மதுரை நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின்போது குளறுபடி - முறைகேடு நடப்பதற்கான முயற்சிகள் நடந்தன. அதை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் நீதிமன்றம் சென்று போராடிய பிறகே ஆட்சியர் மீண்டும் மாற்றப்பட்டார் என்பதை தேர்தல் ஆணையக்குழுவிடம் சுட்டிக்காட்டிய தலைவர்கள், இதுபோன்று இந்தத் தேர்தலில் எங்கும் நடைபெறாது என்பதை உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

கடந்த 20-12-2020 அன்று சமர்ப்பித் திருந்த பல பரிந்துரைகளின் தொடர்ச்சியாக  இந்த மனு கொடுக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளின் கருத்தை கேட்டறிந்த மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேர்தலுக்கான தயாரிப்புகள், நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபடும்போது இவற்றை கருத்தில் கொள்வதாக உறுதி தெரிவித்தனர்.

;