tamilnadu

img

அரசு ஊழியராக்கக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்....

சென்னை:
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்கக் கோரி திங்களன்று (பிப்.22) தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110வது விதியின் கீழ் அறிவித்தபடி, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும், ஊழியர்களுக்கு 21 ஆயிரம் ரூபாயும், உதவியாளர்களுக்கு 18 ஆயிரம் ரூபாயும் ஊதியமாக வழங்க வேண்டும்,அகவிலைப் படியுடன் ஊழியர்களுக்கு 9 ஆயிரம் ரூபாய், உதவியாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக் கொடையாக ஊழியருக்கு 10 லட்சம் ரூபாயும், உதவியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும்,

10 ஆண்டுகள் பணிமுடித்த ஊழியரை மேற்பார்வையாளராகவும், 5 ஆண்டு பணிமுடித்த உதவியாளரை பணியாளராகவும் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 22 கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருப்புப் போராட்டம் தொடங்கியது. நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் தடையை மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது. மாநிலத் தலைவர் எஸ்.ரத்தினமாலா கரூரிலும், பொருளாளர் எஸ்.தேவமணி புதுக்கோட்டையிலும் கலந்து கொண்டனர்.

சென்னை மாவட்டங்கள் சார்பில் தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் (ஐசிடிஎஸ்) அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் டி.டெய்சி கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற போராட்டங்களின் போது அமைச்சரும், அதிகாரிகளும் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. அமைச்சரை 3 மாதத்திற்கு ஒருமுறையும், அதிகாரிகளை மாதம் 3 முறையும் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். பிப். 5 ஆம் தேதி ஐசிடிஎஸ் அலுவலகம் முன்பு மாநிலந் தழுவிய பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினோம்.

அப்போது பேச்சுவார்த்தை நடத்திய சமூகநலத்துறை செயலாளர் மதுமிதா, ஊழியர்களின் முதல் 3 கோரிக்கைகள் தொடர்பாக பிப்.4ல் விவாதித்ததாகவும், விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் உறுதியளித்தார். அதன்படி அறிவிப்பு வெளியிடாததால் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் கோபிகுமார், சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.சித்ரசெல்வி, எஸ்.ஹேமபிரியா, மாவட்ட நிர்வாகிகள் நிர்மலா, ஸ்ரீதேவி (தென்சென்னை), ருக்மணி, நிர்மலா (வடசென்னை), தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி மற்றும் ஓய்வூதியர் சங்க துணைத் தலைவர் கட்டபொம்மன் உள்ளிட்டோர் பேசினர்.

;