tamilnadu

img

அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராக பணிநியமனம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு...

சென்னை:
அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராக பணிநியமனம் செய்துள்ள தமிழக அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழகத்தில் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியும் என்பதற்கு வழிவகுக்கும் முறையில் அர்ச்சகர் பயிற்சி முடித்த பட்டியல் பிரிவு 5 பேர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர் 6 பேர், பிற்படுத்தப் பட்டோர் 12 பேர், பொதுப் பிரிவைச் சேர்ந்தவர் ஒருவர், பெண் ஓதுவார் ஒருவர் என58 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு பாராட்டி வரவேற்கிறது.தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் சமூகநீதிக்கான போராட்டத்தில் இந்தநடவடிக்கை ஒரு மைல்கல்லாக விளங்குகிறது. 1970 ஆம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்தபோது திமுக ஆட்சியில் இதற்கான சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பூர்வமாகவோ, ஆகம விதிகளின்படியோ அனைத்துச்சாதியினரும் அர்ச்சகர் ஆக தடை யில்லை என்று உறுதிசெய்யப்பட்ட பிறகும் வழக்குகளின் வழியாக அனைத்துச்சாதி யினரும் அர்ச்சகர் ஆவது தொடர்ந்து தடுக்கப்பட்டது. இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற நூறாவது நாளில் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இந்திய நாட்டிற்கே முன்னுதாரணமாக கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு ஏற்கனவே அனைத்துச்சாதியினரையும் அர்ச்சகர்கள் ஆக்கிய வரலாற்று நிகழ்வு இங்கு குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் தமிழ் வழிபாட்டிற்கு வழி திறக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து கோயில்களுக்கும் விரிவுபடுத்திடவேண்டும். இதனை தொடர்ந்து அனைத்துச்சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் பெரும்பணியும் துவங்கப்பட்டிருக்கிறது. இதுஒரு நல்ல துவக்கம். தேவையான அளவுஅர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை திறந்து பட்டயப்படிப்பு மட்டுமின்றி பட்டப்படிப்பையும் உருவாக்கி சாதி வித்தியாசம் இன்றி அனைத்துக்கோவில்களிலும் அர்ச்சகர் பணிநியமனங்கள் செய்யப்பட வேண்டும்.  ஒரு நெடுங்கனவை சாத்தியமாக்கிய தமிழகஅரசுக்கு நன்றியும், வாழ்த்துக்களும் தெரிவிப்பதோடு, அர்ச்சகராகும் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;