tamilnadu

img

நெடுஞ்சாலைத்துறையில் கோட்டம் முழுவதும் ஒரே ஒப்பந்ததாரருக்கு வழங்கும் முறை ரத்து... சாலைப்பணியாளர் சங்கம் வரவேற்பு....

சென்னை:
நெடுஞ்சாலைத்துறையில் பி.பி.எம்.சி. (செயல்திறன் அடிப்படையில் பராமரிப்பு ஒப்பந் தம்) திட்ட செயலாக்கம் கைவிடப்படுவதாக சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், பொதுப்பணி கட்டிடங்கள் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணியம், பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 10 ஆண்டுகாலஅதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், விருதுநகர், சிவகங்கை, பழனி, தஞ்சாவூர் ஆகிய கோட்டங்களில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள் பிபிஎம்சி திட்ட செயலாக்கத்தின்படி தனியார் நிறுவனம் நீண்டகால ஓப்பந்தத்தின்படி 5 ஆண்டுகள் பராமரிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் பிற கோட்டங்களில் புதிதாக போடப்படும் நெடுஞ் சாலைகளையும் அதே நிறுவனம் பராமரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

பொய்வழக்கு போட்ட அதிமுக அரசு
 அதிமுக அரசின் தவறான தனியார் மயக் கொள்கையை கைவிட வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து மனு அளித்து, மடிப்பிச்சை கேட்கும் போராட்டம் உள்ளிட்ட பலகட்ட போராட்டகளை நடத்தினோம். 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை கடலூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி ஆகிய 3 முனைகளில் இருந்து நெடும்பயண மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் மேற்கொண்டோம். 2017 ஜூலை 8ஆம் தேதி திண்டுக்கல்லில் தனியார்மய எதிர்ப்பு மாநாடு நடத்தினோம். ஆனால் அதிமுக அரசு பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் சங்க நிர்வாகிகள் மீது பொய் வழக்கு தொடுத்தது.இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அதிமுகவை வீழ்த்தி திமுகவை வெற்றி பெறச் செய்தனர். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் கொடுத்து வருவது பாராட்டத்தக்கது. திமுக தேர்தல் அறிக் கையில் இடம் பெற்றுள்ள பி.பி.எம்.சி. திட்ட செயலாக்கம் ரத்து செய்யப்படும் என்பதற்கு செயல்வடிவம் கொடுத்து, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் பொதுப்பணித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பானது வரவேற்கத்தக்கது.   பிபிஎம்சி திட்ட செயலாக்கத்தினால் சில ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பயனடைகின்றனர்.
ஒரு கிலோ மீட்டர் சாலையை அரசு நேரடியாக போடுவதை விட பேக்கேஜ் திட்டம் மூலம் போட்டால் 50 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலவாகிறது. கோட்டம் முழுவதும் உள்ள சாலைகளை பேக்கேஜ் திட்டத்தில் தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதால் பெருமளவில் செலவீனம் கூடுகிறது. ஒரு கோட்டம் முழுவதும் ஒரே ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் மேற்கொள்வதால்,  சிறு ஒப்பந்ததாரர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக் கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி
னால் சாலைப் பணியாளர்கள் மற்றும் சாலை ஆய்வாளர்கள் என இப்பணியில் ஈடுபடும் பலபேருக்கு வேலை இழப்பீடு என்ற நிலை ஏற்படுகிறது. இதனால் வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகி சமூக அமைதிக்கு சவாலாக அமைந்து விடும் என்று முதல்வர் கருதுவதால், பிபிஎம்சி திட்டம் 27.8.2021 முதல் கைவிடப்படுகிறது என்று நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அறிவிப்பாக வெளியிட்டுள்ளார். மேற்சொன்ன சமூக நீதியை நிலை நிறுத்திடும் வகையிலான அறிவிப்பை தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் வாழ்த்தி வரவேற்கிறது.

வாழ்வாதார கோரிக்கைகள்
மேலும் சாலைப் பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து ஆணை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கான ஊதியம் 5,200 - 20,200 வரையும், தர ஊதியம் 1,900 நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.சாலைப்பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி, நிரந்தர பயணப்படி, சீருடை சலவைப் படி உள்ளிட்ட கோரிக்கைகளையும் நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றித் தந்திடுமாறு தமிழக முதல்வரையும், அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;