சென்னை, ஜூன் 3-சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கு 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 77.48 லட்சம் மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கி தொடங்கி வைத்து உரையாற்றுகையில், “புதிய பாடத் திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள பாடங்களை படிக்க 220 நாட்கள் தேவைப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு தான் இன்றே பள்ளிகள் திறக்கப்பட்டது” என்றார்.பள்ளிகளில் குடிநீர் பற்றாக்குறையை முழுமையாக தீர்த்திடும் வகையில் உள்ளாட்சித் துறையுடன் பள்ளிக்கல்வித் துறை இணைந்து தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசால் நடத்தப்படும் எந்த போட்டித் தேர்வுகளையும் எதிர் கொள்ளும் ஆற்றல் பெறுகின்ற வகையில் இந்த புதிய பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், மேலாண்மை இயக்குநர் ஜெயந்தி, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ராமேஸ் வரமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.