tamilnadu

img

அங்கீகாரம் இல்லாத 709 தனியார் பள்ளிகளுக்கு தடை?

தமிழகத்தில் 709 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 5000 க்கும் அதிகமான தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவை பள்ளிக் கல்வித்துறையின் கீழ் வருகிறது. தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினைத் தடுக்க அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை கண்டறிய பள்ளிக் கல்வித்துறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடந்த 9-ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியது. 

ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறை அதில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளைக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் விளக்கம் கேட்க உத்தரவிடப்பட்டிருந்தது. நாளைக்குள் அந்தப் பள்ளிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் விளக்கம் அளிக்கத் தவறும் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளாக முடிவெடுக்கப்பட்டு, அந்தப் பள்ளிகள் குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்திடவும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் வெளியே இந்தப் பள்ளி அங்கீகாரம் இல்லாத பள்ளி என்கிற பதாகை வைக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 709 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்குவது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரையில்106 பள்ளிகள், திருப்பூரில் 86 பள்ளிகள், சேலத்தில் 53 பள்ளிகள், திருவள்ளூரில் 48 பள்ளிகள், சென்னையில் 7 பள்ளிகள் உட்பட 709 பள்ளிகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளியில் படித்தால் தான் சிறப்பாக படிக்க முடியும், சமூகத்தில் உயர்வாக கருதுவார்கள் என்ற ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையில் தான் தனியார் பள்ளியை நோக்கி ஓடுகிறார்கள். எவ்வளவு சிரமப்பட்டாவது தனியார் பள்ளியில் மட்டும் தான் சேர்ந்தாக வேண்டும் என்ற தனியார் மீதான மோகமே இது போன்ற தரமற்ற பள்ளிகளை உருவாக்குகின்றன.

இவ்வாறு கல்வியாளர்கள் கூறுகின்றனர்.


;