tamilnadu

img

உத்திரமேரூர் அருகே கல்குவாரியில் கோரவிபத்து.... ஒருவர் பலி - கற்குவியலுக்குள் 20 பேர் சிக்கினர்....

செங்கல்பட்டு:
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே திருமுக்கூடலை அடுத்த மதூர் கிராமத்தில் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இதில், வியாழனன்று(பிப்.4) காலை வழக்கம்போல் கல் உடைப்பு, கற்களை லாரியில் ஏற்றி அனுப்பும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திடீரென கல்குவாரி மலையின் ஒருபகுதி பெரும் சத்தத்துடன் சரிந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்த தொழிலாளர்கள் அச்சத்துடன் அங்கிருந்து ஓடினர். எனினும், ஜேசிபி மற்றும் லாரி என 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பாறைகளின் இடிபாடு களில் சிக்கின.மேலும், தொழிலாளர் ஒருவர்மலைச் சரிவில் சிக்கி உயிரிழந்தார். அவரின் உடலை சக தொழிலாளர்கள் மீட்ட னர். மேலும் படுகாயமடைந்த இருவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.கல்குவாரி இடிபாடுகளில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரோடு புதைந்து சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களு டன் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் உள்பட பல்வேறுஅரசுத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் முழுமையாக நடந்து முடிந்தால்தான் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தெரியவரும்.

சட்டவிரோதமாக நடைபெற்று வரும் கல்குவாரிகளை மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல போராட்டங்களும் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து பல முறைமாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனுக்களும் கொடுக்கப் பட்டுள்ளது.ஆனால், கனிமம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கைமேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டியதால் இந்த கல்குவாரியால் சாலையில் மட்டுமல்ல குவாரிக்குள்ளேயும் அடிக்கடி விபத்து நடந்துள்ளதையும் கிராம மக்கள் பட்டியலிடுகின்றனர்.சம்பவம் நடந்துள்ள பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் மதூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறுகையில்,“மதூர் கிராம கல்குவாரியில் வாகனங்கள் மற்றும் மண் அள்ளும் பணியில்  11 பேர் ஈடுபட்டிருந்த நிலையில், மண் மற்றும் பாறைகள் சரிந்துவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மணிகண்டன் என்பவர் பாறை இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளார்.  மேலும் காயமடைந்த `ஹிட்டாச்சி வாகனத்தின் ஓட்டுநர்கள் சோனாஹன் சாரி மற்றும் சுரேஷ்ஆகியோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.இந்த  கல்குவாரி அரசு அனுமதியுடன் இயங்கி வருகிறது. இந்த குவாரியில் பணிபுரிந்த தொழிலாளர்களை தவிரவேறு நபர்கள் விபத்தில் சிக்கவில்லை என்றும் எனினும், 40 தீயணைப்பு மீட்பு வீரர்கள் மற்றும் 47 வீரர்கள் அடங்கிய மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்புபணிகளில் ஈடுபட உள்ளதாக கூறினார்.

பாறை தற்போது எந்த நிலையில் உள்ளது என தெரியவில்லை. அதனால்,கனிமவளத்துறை பொறியாளர்கள் மூலம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முழு ஆய்வுக்கு பிறகு சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம்அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். உத்திரமேரூர் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கி வரும் கல் குவாரிகளின் நிலை குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் சிறப்பு குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.இதனிடையே, தீயணைப்புத்துறை இயக்குநர் சைலேந்திரபாபு சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வை யிட்டார்.

;