tamilnadu

img

இந்நாள் செப்டம்பர் 28 இதற்கு முன்னால்

1961 - சிரியாவில் ஏற்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு, ஐக்கிய அரபுக் குடியரசை முடிவுக்குக்கொண்டு வந்து, மீண்டும் சிரியக் குடியரசை ஏற்படுத்தியது. ஐக்கிய அரபுக் குடியரசு என்பது, எகிப்தும், சிரியாவும் இணைந்து 1958இல் உருவான நாடாகும். அனைத்து அரபு நாடுகளையும் ஒன்றிணைக்கவேண்டுமென்ற முயற்சியின் தொடக்கமாக இது உருவாக்கப்பட்டது. எகிப்து குடியரசுத் தலைவர் கமால் அப்தெல் நாசர், 1956இல் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கியதைத் தொடர்ந்து, அதன்மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் இஸ்ரேல் தொடுத்த சூயஸ் போருக்குப்பின் (இரண்டாம் அரபு-இஸ்ரேலியப் போர்), அரபு நாடுகளிடையே நாசர்மீதான மதிப்பை மிகஅதிகமாக உயர்த்தியிருந்தது. ஒருங்கிணைந்த அரபு நாடு என்ற உணர்வு வழமையாகவே நிறைந்திருந்த சிரியாவில், நாசரின் தலைமைமீது பரவலான ஈர்ப்பு இருந்தது. சமூகவுடைமைச் சிந்தனைகொண்ட முற்போக்காளரான நாசர், பல்வேறு நவீனமய நடவடிக்கைகளை எகிப்தில் மேற்கொண்டிருந்தார். சிரியாவில் பலம்வாய்ந்த பொதுவுடைமைக் கட்சி இருந்ததுடன், புதிதாக நியமிக்கப்பட்ட ராணுவத் தளபதியும் பொதுவுடைமைச் சிந்தனைகொண்டவராக இருந்தார்.

அமெரிக்க சோவியத் பனிப்போர்க் கால மென்பதால், சிரியா பொதுவுடைமை நாடாகிவிடும் என்று அச்சமுற்ற அமெரிக்காவின் தூண்டுதலில், சிரிய எல்லையில் துருக்கி படைகளைக் குவித்த 1957இன் நெருக்கடிக்குப்பின், சிரியா எகிப்துடன் இணைந்துகொள்ள விரும்பியது. இரு நாடுகளையும் இணைத்து விடுவதைவிட, ஓர் ஒன்றியமாகச் செயல்படலாம் என்பதே நாசரின் கருத்தாக இருந்தது. ஆனால், பொதுவுடைமைக் கட்சியின் பலத்தால், சிரியா பொதுவுடைமை நாடாகிவிடுமென்ற அச்சம், சிரியாவின் பாத் கட்சிக்கும் இருந்ததால், அதன் வற்புறுத்தலாலேயே, ஒரே நாடாக இணைக்க நாசர் ஒப்புக்கொண்டார். 1958 பிப்ரவரி 22இல் ஐக்கிய அரபுக் குடியரசு உருவானது. எகிப்தின் தலைமையில், தாங்கள் ஆட்சி நடத்தலாம் என்ற பாத் கட்சியினர், பெருமுதலாளிகளின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, ஒற்றைப் பாராளுமன்றத்தை அமைத்த நாசர், பாத் உட்பட அனைத்துக் கட்சிகளையும் தடைசெய்துவிட்டார். பாராளுமன்றத்தில் மூன்றிலொரு பங்கு சிரியாவுக்குப் பிரதிநிதித்துவம் இருந்தாலும், பாத் கட்சி எதிர்பார்த்தபடி அதிகாரம் கிடைக்கவில்லை. மறுபுறம், ஏற்கெனவே எகிப்தில் செய்ததுபோல, முக்கியத்துறைகளை தேசவுடைமையாக்கினார் நாசர். பாத் கட்சியினர், பெருமுதலாளிகள் ஆகிய இருதரப்புமே நாசருக்கு எதிராக மாறியதைத் தொடர்ந்து, 1961 செப்டம்பர் 28இல் ஒரு ராணுவக் கலகத்தின்மூலம் சிரியாவின் ஆட்சியைக் கைப்பற்றி, சிரியா தனி நாடானதாக அறிவித்தனர்.

- அறிவுக்கடல்