tamilnadu

img

இந்நாள் ஜன. 04 இதற்கு முன்னால்

1847 - சாமுவேல் கோல்ட்-டின் சுழல்-கைத்துப்பாக்கி(ரிவால்வர்) ஆயிரம் தயாரித்துத்தர, அமெரிக்க அரசின் சார்பில் சாமுவேல் வாக்கர் என்ற ராணுவ அலுவலர் கேட்டுக்கொண்டார். கைத்துப்பாக்கியின் வளர்ச்சிக்கு இந்நிகழ்வே தொடக்கமாக அமைந்தது. தொடக்கத்தில் பீரங்கிகளில் சுடுவதற்கே வெடிமருந்து பயன்படுத்தப்பட்டாலும், கையில் எடுத்துச்சென்று பயன்படுத்தும் ஆயுதத்துக்கான முயற்சிகள் அக்காலத்திலேயே தொடங்கிவிட்டன. சொல்லப்போனால், முதலில் சீனர்கள் குழலில் வெடிமருந்தை நிரப்பி, அம்பு எய்யப் பயன்படுத்தியதே கைத்துப்பாக்கியின் தொடக்கம்தான்! ஏராளமான கைத்துப்பாக்கி வடிவங்கள் தொடர்ந்து முயற்சிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், வெடிமருந்தை நிரப்புதல், வெடிக்கவைப்பதற்கான தொழில்நுட்பங்கள் முதலானவற்றிலிருந்த சிரமங்களால் கையில் எடுத்துச்சென்று பயன்படுத்தத்தக்க வெற்றிகரமான துப்பாக்கி உருவாகவில்லை. கப்பலில் பல்சக்கரத்தை எதிர்ப்புறம் சுழலாமல் தடுக்கும் நழுவுதிருகி என்னும் அமைப்பைப் பார்த்து, அடுத்தடுத்து 5 முறை சுடும் வகையில், தானே சுழன்றுகொள்ளும் சுழல்-துப்பாக்கியைக் கோல்ட்  உருவாக்கினார்.

1835இல் இங்கிலாந்திலும், 1836இல் அமெரிக்காவிலும் இதற்கான காப்புரிமையையும் பெற்று, கடன் வாங்கி, சுமார் ஆயிரம் துப்பாக்கிகளை அவர் தயாரித்தாலும், விற்க முடியாததால், அவர் வேறு தொழிலுக்கு மாறிவிட்டார்! டெக்சாசின் தொல்குடியினருடனான ஒரு சண்டையில், இத்துப்பாக்கியைப் பயன்படுத்தி, வெறும் 15 பேர் படையைக்கொண்டு, 70 பேரை எளிதில் வீழ்த்திய வாக்கர், இவரைத் தேடிவந்து கேட்டபோது, துப்பாக்கித் தயாரிக்கும் வசதிகள்கூட கோல்ட்டிடம் இல்லை! 5க்குப் பதில் 6 குண்டுகள், அடுத்த குண்டு சுடுவதற்கு விரைந்து தயாராதல், ஒரு மனிதனை அல்லது குதிரையை ஒரே குண்டில் கொல்லும் வலு என்று வாக்கர் பரிந்துரைத்த மேம்பாடுகளுடன், கோல்ட்-வாக்கர் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டதே கைத்துப்பாக்கியின் மாபெரும் வளர்ச்சியைத் தொடங்கிவைத்தது! ரிவால்வர் (சுழலி!) என்ற பெயர் இயல்பாக உருவானாலும், 1420களில் நடைபெற்ற பொஹீமியப் போர்களில் பயன்படுத்தப்பட்ட கையில் எடுத்துச் செல்லத்தக்க சிறிய பீரங்கி, ஊதுகுழல் என்ற பொருளுடைய, பிஸ்டாலா என்ற செக் மொழிப் பெயரால் அழைக்கப்பட்டதிலிருந்து, பிஸ்டல் என்ற தற்போதைய பெயர் வந்தது. 1857இல் ஸ்மித் அண்ட் வெஸன் நிறுவனம், வெடிமருந்தை நிரப்புவதற்குப் பதில் தயாரிக்கப்பட்ட தோட்டாக்களை அறிமுகப்படுத்தியது. சுழலியின்றி, தோட்டாத்தொகுப்பை(மெகசின்) பயன்படுத்தும் பாதித்தானியங்கி பிஸ்டலை ஜெர்மனியின் பால் மாசர் 1896இல் உருவாக்கினார். 

;