tamilnadu

img

இந்நாள்... ஜனவரி 12 இதற்கு முன்னால்...

1964 - அரேபியர்களிடமிருந்து ஸான்ஸிபாருக்கு விடு தலையைப் பெற்றெடுத்த ஸான்ஸிபார் புரட்சி நடை பெற்றது. ஸான்ஸிபார் என்பது, இந்தியப் பெருங்கடலில், ஆப்ரிக்கா வின் தாங்கான்யிக்கா பகுதியை ஒட்டியுள்ள தீவுக் கூட்டமாகும். இரு பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வசித்த பகுதியான இது, பெரும் ஆப்ரிக்க ஏரிகள், அரேபியத் தீபகற்பம், இந்தியத் துணைக்கண் டம் ஆகிய மூன்று பகுதிகளுக்குமிடையே, வணிகர்களுக்கு முக்கிய மையமாக விளங்கியது. இதன் உங்குஜா பாதுகாப்பான துறைமுகமாக விளங்கியதால், ஓமன், ஏமன் நாட்டு அரேபியர்கள் இங்கே தங்கினர். அவர்கள் தங்கிய கல் நகரம் என்ற பகுதியே ஸான்ஸிபார் நகரமாகி யது. வணிகத் தொடர்புகளால் இந்தியர்களும் இங்கிருந்தனர். கடற்பய ணங்களால், புதிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இது போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டிற்குப்போய், சுமார் இரு நூற்றாண்டு கள் இருந்து,

1698இல் ஓமன் சுல்தான் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. 1800களில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருந்த இங்கிலாந்து, 1890இல் 38 நிமிடங்களே நடந்த உலக வரலாற்றின் மிகக் குறுகிய நேரப் போரான, ஆங்கிலோ-ஸான்ஸிபார் போரின்மூலம் இதனைக் கைப்பற்றி யது. இங்கிலாந்துக்குக் கட்டுப்பட்டவர்களாக ஸான்ஸிபார் சுல்தான்களும் தொடர்ந்ததால், 1963 டிசம்பர் 10இல் தாங்கான்யிக்கா, ஸான்ஸிபார் உள்ளிட்ட பகுதிகளுக்கு விடுதலையளித்து இங்கிலாந்து வெளியேறிய போது, மீண்டும் சுல்தானின் முடியாட்சியின்கீழ் இது வந்தது. சுமார் 2,30,000 ஆப்ரிக்கர்கள், 50,000 அரேபியர்கள், 20,000 தெற்காசியா உள்ளிட்ட பகுதியினர் இருந்த ஸான்ஸ்பாரில், விடுதலைக்கு முன்னேற்பாடாக 1961இலிருந்து நடத்தப்பட்ட தேர்தல்களில், அதிக வாக்குகளை ஆப்ரிக்கர்களின் கட்சியே பெற்றாலும், தில்லுமுல்லுகள் மூலம் அதிக இடங்களை அரேபியர்கள் பெற்றனர். அடிமை வணிகம் தடை செய்யப்பட்டிருந்தபோதும், ஆப்ரிக்கர்கள் அடிமைகளாக இருக்க மட்டுமே தகுதியானவர்கள் என்பதான அணுகுமுறையுடன், ஆப்ரிக்கர் களின் பகுதியில் பள்ளிகளைக் குறைத்தது உள்ளிட்ட நடவடிக்கைகள், அவர்களை இரண்டாம்தரக் குடிமக்களாகவே நடத்த முயற்சித்த நிலை யில்தான் இப்புரட்சி வெடித்தது. ஏற்கெனவே காவலர்களாக இருந்த ஆப்ரிக்கர்கள் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், அவர்களின் வழிகாட்டுதலுடன் பெரிய ஆயுதங்களற்ற மக்கள், காவல் நிலையங்களைக் கைப்பற்றி அங்கிருந்த ஆயுதங்களைக்கொண்டே போராடி வென்றனர். அவ்வாண்டின் ஏப்ரலில் தாங்கான்யிக்காவுடன் இணைந்து ஒருங்கிணைந்த குடியரசு உருவாக்கப்பட்டதுடன், அடுத்த ஆண்டுக்குள்ளாகவே அந்த ஒருங்கிணைந்த நாட்டின் பெயரும் தாங்கான்யிக்கா, ஸான்ஸிபார் ஆகியவற்றை இணைத்து தான்-ஸானியா என்று மாற்றம் செய்யப்பட்டது!

- அறிவுக்கடல்

;