tamilnadu

img

இந்நாள் ஜன. 18 இதற்கு முன்னால்

1778 - ஹவாய் தீவுகளுக்கு முதன்முறையாகச் சென்ற கேப்டன் ஜேம்ஸ் குக், அவற்றுக்கு சாண்ட்விச் தீவுகள் என்று பெயரிட்டார். சாண்ட்விச் என்றதும் ஒன்றன்மீது ஒன்றாகத் தீவுகள் இருந்தி ருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறதா? உண்மை யில், இங்கிலாந்திலுள்ள சாண்ட்விச் நகரத்தின் நான்காம் ஏர்ல்(சிற்றரசர்-பிரபு) ஆகவும், கடற்படையின் பர்ஸ்ட் லார்டு (அமைச்சர்) ஆக வுமிருந்த ஜான் மாண்ட்டேகு-வைச் சிறப்பிப்பதற்காக அவர் அப்பெயரைச் சூட்டினார். சாப்பிடுகிற சாண்ட்விச்சிற்கும் இதற்கும் தொடர்பே இல்லையா? மெல்லிய ரொட்டிக்குள் மாமிசம் உள்ளிட்டவற்றை வைத்துச் சுருட்டி(தற்போதைய ராப்!) பண்டைய யூதர்கள் உண்டிருக்கிறார்கள். தட்டுக்குப் பதிலாக ரொட்டியின்மீது மாமிசம், காய்களை வைத்து, ரொட்டியை விட்டுவிட்டோ, ரொட்டியுடனோ சாப்பிடுவது இடைக்காலத்தில் மேற்கத்திய நாடுகளில் பழக்கமாக இருந்துள்ளது.

ஒருமுறை உயர்குடியினருக்கான ஓர் உணவகத்தில், இரண்டு ரொட்டிகளுக்கு(பிரெட்) நடுவில் (சமைத்த) மாமிசத்தை வைத்துத்தருமாறு பணியாளரிடம், இந்த ஜான் மாண்டேகு கேட்டாராம். அது நன்றாக இருக்கவே மற்றவர்களும் அதைக் கேட்டிருக்கிறார்கள். ஜமீன்தார், சமஸ்தா னம் போன்றவர்களை, அவர்களின் பெயரைச் சொல்லிக் குறிப்பிடுவது மரியாதைக் குறைவு என்று ஊர் பெயரைக் குறிப்பிடும் வழக்கம் நம்மிடம் உள்ளதல்லவா? அதைப் போலவே, சாண்ட்விச்(சின் ஏர்ல்!) கேட்டதையே தருமாறு மற்றவர்களும் கேட்க, அது சாண்ட்விச்-சாகவே ஆகிப்போனது. அந்த மாண்ட்டேகுவின் பெயரைத்தான், மரி யாதையாக, சாண்ட்விச் என்று குக் சூட்டினார். ஹவாயில் மனிதர்கள் எப்போதிருந்து இருக்கிறார்கள் என்ற வரலாறு தெளிவாக இல்லையெனினும், நிச்சயமாக 11-12ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறார்கள். அப்படி முதன்முதலில் ஹவாயைக் கண்டறிந்தவராகக் குறிப்பிடப்படும் ஹவாய் லோவா என்பவர் பெயரிலிருந்து ஹவாய் என்ற பெயர் வந்ததாகவும், ஹவாய் மொழியில் புதிய(ஹவா) தாய்மண்(ஐஐ) என்பதிலிருந்து வந்ததாகவும் இரு கருத்துகள் உள்ளன. புவியியல்ரீதியாக வடஅமெரிக்கக் கண்டத்துடன் தொடர்பே இல்லையெனினும், அமெரிக்காவின் மாநிலமாகவுள்ள ஹவாய், 8 பெரிய தீவுகள், பல பவளத் தீவுகள், ஏராளமான குட்டித்தீவுகள் ஆகிய 132 தீவுகளைக் கொண்டது. 8 பெரிய தீவுகளைத் தவிர்த்த, 124 தீவுகளின் மொத்தப் பரப்பே சுமார் 10 ச.கி.மீ.தான். இவற்றில் மிட்வே என்ற தீவு மட்டும் ஹவாய் மாநிலத்தோடு அன்றி, அமெரிக்காவின் நேரடிப் பகுதியாக உள்ளது. உலகின் மிகஅதிகமாக வெடிக்கும் எரிமலைகளுள் ஒன்றான கீலாவியா உள்ளிட்ட 5 முக்கிய எரிமலைகளும் இங்குள்ளன.

- அறிவுக்கடல்

;