tamilnadu

img

அடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...

சிதம்பரம்:
தமிழகத்தில் நடைபெறக்கூடிய எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான அடிமைகளின் அரசை அகற்றுவோம் என்று தமிழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் அழைப்பு விடுத்துள்ளார்.
 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் தமிழர்களின் கலாச்சார அடையாளங்களையும் உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய அரசு திமுக தலைமையில் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 26) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மக்கள் கோரிக்கை மாநாட்டில் அவர் பேசியதாவது:

விரைவில் தமிழகம்,புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் எத்தகைய சூழலில் நடைபெறுகிறது என்பது முக்கியமானது. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு  அரசியல் சாசனத்தின் அடிப்படை கூறுகளில் ஒன்றான  மதச்சார்பற்ற குடியரசு என்பதைத் தகர்க்கக்கூடிய மக்களிடம் மத துவேஷத்தை ஏற்படுத்தக்கூடிய அரசாக உள்ளது.பலமொழி பேசும், பல இனங்கள் பல கலாச்சாரங்களைக்  கொண்ட மக்கள் வாழும் இந்தியாவில் பன்முகத்தன்மையை அழித்து இந்து ராஷ்டிரா என்ற ஒற்றை கலாச்சாரத்தை ஏற்படுத்த பாஜகவும் ஆர்எஸ்.எஸ் அமைப்பும் தீவிரமாக முயன்று வரும் சூழலில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது.  மக்களின் உரிமைகளைப் பறிக்கக்கூடிய பாஜக மற்றும் அதன் கூட்டாளிகள் வலுவடைய நாம் அனுமதிக்கப்போகிறோமா அல்லது தமிழகத்தின் மொழி, கலாச்சாரம், உரிமைகளைப் பாதுகாக்கப் போகிறோமா என்று முடிவு செய்யும் தேர்தல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஆகும்.

 வெளிநாட்டு அந்நிய மூலதனத்தைக் கொண்டுவரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் நமது நாட்டில் உள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சேவகம் செய்யக்கூடிய அரசுதான் மத்தியில் உள்ளது. இந்த அரசு சாமானிய மக்களுக்கு பாடுபடக்கூடிய அரசாக இல்லை.  நமது நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இந்துக்களாக இருந்தாலும் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் பாதிக்கப்படும் மக்களில் பெரும்பாலானோர் இவர்களே. வலுவான இந்தியா என்ற கூறிக்கொண்டே அரசின் வளங்களை பாஜக அரசு அந்நிய நிறுவனங்களுக்கும் அம்பானி. அதானி போன்ற உள்நாட்டில் உள்ள பெரு நிறுவனங்களுக்கும் பாஜக அரசு  விற்று வருகிறது.

கொள்கையில்லாத அதிமுக
விவசாயிகள் பிரச்சனையாக இருந்தாலும் எரிபொருள் விலையேற்றமாக இருந்தாலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதாக இருக்கட்டும். தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு இந்த கொள்கைகளை எதிர்க்கவில்லை. மாறாக மோடி அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரித்து  நாடாளுமன்றத்தில் அதிமுக வாக்களித்துள்ளது. நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் தொழிலாளர் தொடர்பான 4 சட்டத்தொகுப்புகளையும் அதிமுக ஆதரித்தது. அதிமுகவிற்கு என்று எந்த கொள்கையும் இல்லை. பாஜகவின் கூட்டாளி என்ற முறையில் அனைத்தையும் அதிமுக ஆதரித்து வருகிறது.

அடிமைகளின் அரசு
தமிழ்நாடு மற்றும் தமிழ்மொழி பேசும் மக்களின் நலன்களைப் பாதுகாப்பது முக்கியம் அல்லவா. அதையும் அதிமுக அரசு செய்யவில்லை. நெய்வேலி நிறுவனத்தின் பங்குகளைத்  தனியாருக்கு மத்திய அரசு விற்பனை செய்ய முன்வந்தபோது விற்கக்கூடாது, வேண்டுமானால் நாங்களே வாங்கிக்கொள்கிறோம் என்று ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு முடிவெடுத்தது. தற்போதுள்ள அதிமுக அரசும்  அதைச் செய்யமுடியும். ஆனால் பாஜகவின் இளைய பங்காளியாக அவர்கள் மாறிவிட்டார்கள். செய்யமாட்டார்கள். இளைய பங்காளியாகக் கூட இல்லை. அடிமைகளாக மாறிவிட்டனர்.  எனவேதான் தமிழக மக்களுக்கு எதிரான  மத்திய அரசின் எந்தவொரு தாக்குதலையும்  கொள்கைகளையும் எதிர்க்க அதிமுக முன்வருவதில்லை.

தமிழர்களின் அடையாளம் பாதுகாக்கப்படவேண்டும்
தமிழர்களுக்கு என்று ஒரு  நாகரீகம், கலாச்சாரம் உண்டு. இந்தியா என்பது பல கலாச்சாரங்களைப் பல இனங்களைக் கொண்ட மிகப்பெரிய நாடாகும். ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு நாடு, ஒரு கலாச்சாரம், ஒரு மொழி மட்டுமே இருக்கவேண்டும் என்று பேசி வருகிறது. தற்போது ஒரே தலைவர் என்ற நிலையை உருவாக்கிவிட்டது. நாட்டு மக்கள் மீது இந்துத்துவா கொள்கைகளைத் திணித்து வருகிறது. இந்தி மொழியைத் திணிக்கிறது. இந்துத்துவா கலாச்சாரம் தான் ஒரே கலாச்சாரம் என்று சொல்கிறது. எனவே தமிழக மக்களின் மொழியையும் கலாச்சாரத்தையும் உரிமைகளையும் அதிமுக அரசால் பாதுகாக்கமுடியாது. இவை அனைத்தும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும்.

மக்கள் மீது பல்வேறு  வகையில் தாக்குதலைத் தொடுக்கும் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடிய வகையிலும் தமிழகர்களின் நாகரீகம், கலாச்சாரம், மொழி ஆகியவற்றின் உரிமைகளைப் பாதுகாக்கக்கூடியதாகவும் கொண்ட அரசு  தமிழகத்தில் உருவாகவேண்டும். இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே தான் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில்  தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் போதாது. மதச்சார்பின்மையையும்  தமிழர்களின் கலாச்சார அடையாளங்களையும் உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய  மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்க்கக்கூடிய அரசு தமிழகத்தில் அமைய வேண்டும்.

பறிபோன அடையாளம்
இந்த பின்னணியில்  வரும் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பாஜகவுடன் கூட்டுச்சேர்ந்துள்ள கட்சிகளுக்கு என்று வரலாறு உண்டு. அசாம் மாநிலத்திலும் தேர்தல் நடைபெறவுள்ளது. அசாம் கனபரிஷத்  ஒரு காலத்தில் அம்மாநிலத்தில் ஆளும்கட்சியாக இருந்தது. பாஜகவுடன் இரண்டு முறை கூட்டுச் சேர்ந்த பின்னர்  பாஜகவின் இளைய பங்காளியாக மாறிவிட்டது.  பின்னர் பாஜக முதன்மையான கட்சியாக மாறியதோடு ஆளும்கட்சியாகவும் உருவெடுத்துவிட்டது. இதனால் அசாம் கனபரிஷத் கட்சியின் அடையாளமே பறிபோய்விட்டது.

அதிமுகவை பாஜக கபளீகரம் செய்வது உறுதி
இப்போது தமிழகத்திற்கு வருவோம். தமிழகத்தில் பாஜக அதிமுகவைவிடக் குறைவான தொகுதிகளில் போட்டியிட்டாலும் அதிமுகவை கபளீகரம் செய்வது உறுதி. அதிலிருந்து அதிமுக தப்பமுடியாது. இதுதான் பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-சின் குணாம்சமாகும். அனைத்து மாநிலங்களிலும் பாஜக இதையே செய்து வருகிறது. அனைத்து மாநிலக் கட்சிகளையும் ஓரம் கட்டி தன்னை பலப்படுத்திக்கொள்கிறது. எனவே பாஜக குறித்த இத்தகைய கொள்கை
கள் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களிடம் கொண்டு செல்லப்படும்.  தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி நிச்சயம் தோற்கடிக்கப்பட்டு திமுக தலைமையில் புதிய அரசு தமிழகத்தில் அமையும். இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார். 
முன்னதாக சிதம்பரம் நகரில் செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்த பிரகாஷ்காரத் இதே கருத்தை வெளியிட்டார். செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார்.பேட்டியின் போது கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி,. மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் மூசா,மாதவன்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;