tamilnadu

கோடையில் முதன் முறையாக நிரம்பிய வீராணம் ஏரி

சிதம்பரம், ஏப்.13-சென்னை குடிநீருக்காக மேட்டூர் அணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தற்போது ஏரி நிரம்பி காட்சி அளிக்கிறது.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர இந்த ஏரியில் இருந்து தினமும் சென்னை மக்களின் தேவைக்காக குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் தேதி நீர் வரத்து அதிகமாக இருந்ததால் வீராணம் ஏரி 47.50 அடியை எட்டியது. இங்கிருந்து பாசனத்துக்காக 34 மதகுகள் வழியாகவும், சென்னை குடிநீருக்காக ராட்சத குழாய் மூலமும் 74 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் கடந்த 2 மாதமாக வெயில் சுட்டெரித்து வருவதாலும், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படாததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறையத்தொடங்கியது.இதைத்தொடர்ந்து சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 31 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு வந்து சேர்ந்தது.பின்னர் கடந்த 4 ஆம் தேதி கீழணைக்கு தண்ணீர் வந்து. அங்கிருந்து கடந்த 8 ஆம் தேதி 2 ஆயிரம் கனஅடி நீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.40 அடியாக உயர்ந்தது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 60 கனஅடி நீர் அனுப்பி வைக்கப் பட்டது. இதையடுத்து, வீராணம் ஏரி முழுக் கொள்ளவான 47.50 அடியை எட்டியது. இதனால் ஏரி தற்போது கடல்போல் காட்சி அளிக்கிறது.கோடைகாலத்தில் வீராணம் ஏரி வறண்டு காணப்படும். ஏரியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள். இந்த நிலையில் சென்னை குடிநீருக்காக மேட்டூர் அணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தற்போது ஏரி நிரம்பி காட்சியளிக்கிறது.

;