tamilnadu

img

மே 30 சிஐடியு அமைப்பு தினம்!

ஒற்றுமைத் தேரின் அச்சாணி சிஐடியு!

ஒன்றுபடுவோம்! போராடுவோம்!! என்ற போர்ப் பரணியோடு கல்கத்தா நகரில் 1970 மே 30ம் நாள் உதயமான சிஐடியு இந்திய நாட்டை 50 ஆண்டுகள் பவனிவந்து 51ம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. சிஐடியுவின் பொன்விழா, 50 ஆண்டுகால சாதனைகளை பட்டியலிட்டு, களிப்பும், உவகையும் மீதூற மகிழ்ந்து கொண்டாடி மகிழும் விழா மட்டுமன்று; கடந்த கால அனுபவங்களையும் படிப்பினைகளையும் கருத்தில் கொண்டு இந்திய உழைப்பாளி மக்கள் இன்று எதிர்கொள்கின்ற சவால்களை முடியடித்து, வரலாறு நம்மீது சுமத்தியுள்ள வர்க்கக் கடமைகளை நிறைவேற்றும் பதையில் நமது லட்சியப் பயணத்தை மேலும் வீறுகொண்டு தொடர உறுதிபூணும் தருணம் இது. சிஐடியு என்கிற நான்கு எழுத்து நாடெங்கும் தொழிலாளி வர்க்கத்திடம் ஒரு மந்திரச் சொல்லாய் - தோன்றியவுடனே சிறப்பும் பெற்றது. முதலாளிகளும் மூலதனமும் மூக்கின்மேல் விரல்வைத்து உற்றுநோக்கினர். தொழிற்சங்கங்களை அமுக்கிவைத்துவிட்டோம் என்று ஆனந்தபட்டவேளையில் இப்படி போர் முழக்கத்தோடு ஒரு அமைப்பு முளைத்திருக்கிறதே என்ற கிலியும் தொற்றிக்கொண்டது.

ஒற்றுமைத் தேரின் அச்சாணி

இன்றைய இந்திய தொழிலாளி வர்க்கத்தின் தொழிற்சங்க இயக்கத்தின் ஒற்றுமைத் தேருக்கு அச்சாணியாய் திகழ்வது சிஐடியு என்பதை மறுப்பவர் எவரும் இல்லை.

  1. குறைந்தபட்ச போனஸை 4 சதவிகிதத்திலிருந்து 8.33 சதவீகிதமாக உயர்த்துவதற்கான இயக்கம், போனஸ் கணக்கிடுவதற்கான உச்சவரம்பை உயர்த்த நடத்திய போராட்டம்.
  2. 1974 ரயில்வே தொழிலாளர்களின் ஒன்றுபட்ட வேலை நிறுத்தம்.
  3. கட்டாய சேமிப்பு என்ற பெயரில் இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் கொணரப்பட்ட ஊதிய முடக்க திட்டத்தை எதிர்த்த இயக்கம்.
  4. 1975-76 அவசர கால கொடுங்கோன்மையின் குவிமுனைத் தாக்குதலை சந்தித்த தொழிலாளர் வர்க்கத்தின் எதிர் நடவடிக்கைகள்.
  5. பூதலிங்கம் குழுவின் மோசமான பரிந்துரைகளை தாங்கி வந்த புதிய ஊதிய கொள்கை என்ற பேரபாயத்தை முறியடித்த இயக்கம்.
  6. புதிய தொழிலுறவு மசோதா என்ற பெயரில் ஜனதா ஆட்சிகாலத்தில் தொடுக்கப்பட்ட தொழிலாளர் விரோத, உரிமைப் பறிப்பு திட்டத்தை ஊதித் தள்ளிய போராட்டம்.
  7. மாறாது நிலைகொண்டுவிட்ட பொதுத்துறை தொழிலாளர்களுக்கான பஞ்சப்படி  உயர்த்துவதிலிருந்து  தொடங்கி இன்று வரை பொதுத்துறையையும் தொழிலாளர் நலன்களையும் பாதுகாக்கும் கூட்டு இயக்கம்.
  8. புதிய பொருளாதாரக் கொள்கையையும், காட் ஒப்பந்தத்தையும் எதிர்த்த தொடர்ச்சியான போராட்டங்கள்.
  9. குறைந்தபட்ச ஊதியம், தொழிற்சங்க உரிமை, கூட்டுபேர உரிமை போன்றவற்றிற்காக நடத்திய எண்ணற்ற இயக்கங்கள்.
  10. முறைசாரா தொழிலாளர்கள், உழைக்கும் பெண்கள் நலனுக்காக நடத்திய தொடர் இயக்கங்கள்.
  11. அனைத்திந்திய அளவிலான பேரணிகள்,  சிறப்பு மாநாடுகள், பொது வேலை நிறுத்தங்கள், பந்த் என்று எண்ணற்ற கூட்டு இயக்கங்கள் என 50 ஆண்டுகளில் இந்திய தொழிலாளி வர்க்கம் ஈடுபட்ட அனைத்து போராட்ட இயக்கங்களிலும் பல்வேறு தரப்பினரையும் ஒன்றுபடுத்தி பங்கேற்றவைத்ததில்  சிஐடியு பணி மகத்தானது.

தொழிற்சங்க ஐக்கிய கவுன்சில் (UCTU),  தேசிய போராட்டக்குழு (NCC), ஸ்பான்சரிங் கமிட்டி, வெகுஜனங்களின் தேசிய மேடை என்று மாறிவரும் காலச்சூழ்நிலைகளின் தேவைகளுக்கேற்ப ஒன்றுபட்ட போராட்டங்களுக்கான புதிய புதிய அமைப்புகளை உருவாக்கி செயல்பட்டதில் சிஐடியு பரந்துபட்ட ஒற்றுமையைக் கட்டி செயலூக்கம் உள்ள முன்னணி அமைப்பாக பாடுபட்டு வந்துள்ளது. நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக, பொதுத்துறைகளை பாதுகாக்க உழைப்பவர் நலன்காத்திட சிஐடியு சுயேட்சையான போராட்டங்களில் ஈடுப்பட்டது.  அதே நேரத்தில் ஒன்றுபட்ட போராட்டத்திற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் அகில இந்திய அளவில் 17 வேலை நிறுத்த போராட்டங்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.  அதில் சிஐடியுவிற்கு முக்கியப் பங்கு உண்டு.

புதிய தாக்குதல்-வலுவான போர்

1990ல் காங்கிரஸ் ஆட்சி கொண்டுவந்த தாராளமய திட்டங்கள், நரேந்திரமோடியின் தலைமையிலான 6 ஆண்டுகால பாஜக ஆட்சியில் உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகள் மூர்க்கத்தனமாக அமலாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் தாண்டவமாடும் வேளையில் மோடி அரசு, கொரோனாவை பயன்படுத்தி நிலக்கரி, கனிமம், இயற்கைவளம், விமான நிலையங்கள், விண்வெளி, பாதுகாப்பு, ரயில்வே, மருத்துவம் போன்றவற்றில் தனியார்மயத்தை புகுத்தும் தரங்கெட்ட செயலில் ஈடுபட்டு வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் தொழிலாளர் நல சட்டங்களை நிறுத்திவைப்பது, முடக்கிவைப்பது போன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறத்தில் தொழிலாளர் நலச்சட்டங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்துவது, 8 மணி நேர வேலையை 12 மணிநேரமாக மாற்றுவது என தொழிலாளர் விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்த தாராளமய காலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளி கூட்டத்திற்கு சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் தொழிற்சாலைகளில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. தொழிற்சங்கம் அமைக்கப்பட்ட இடங்களில் அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. கொத்துக்கொத்தாக தொழிலாளர்கள் பழிவாங்கப்படுகின்றனர். தமிழகமும் இந்த கொடுமைகளில் முதல் வரிசையில் இருக்கிறது.  புதிய தொழிற்சாலைகளில், குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களில் கான்ட்ராக்ட், கேசுவல், பயிற்சியாளர் என்ற பெயரில் பெரும் உழைப்புக் கொள்ளை நடக்கிறது. எந்த சட்டமும் இங்கு நுழைவதில்லை. அரசு இயந்திரம் இவர்கள் முன்பு கூனிக் குறுகி நிற்கின்றது. இத்தனை ஆண்டுகளில் இந்தியாவில் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்காக ஒரு முதலாளி கூட தண்டிக்கப்பட்டதில்லை. அந்த அளவிற்கு சட்டத்தில் சல்லடையாக ஓட்டைகள்.  1960களைப் போன்ற ஒரு வெடிப்புச் சூழல் தொழில் துறையில் நாடுமுழுவதும் நிலவுகிறது.  தொழிலாளர்களுக்கு எதிரான இந்த புதிய தக்குதலை எதிர்த்து சிஐடியு முன்வரிசைப் போராளியாய் நிற்கிறது.  இதேபோல முறைசாரா தொழிலாளர்கள், சுயதொழில் செய்து பிழைப்போர், சிறு-குறுந்தொழிலில் பணியாற்றும் தொழிலாளர்கள் உடைமையாளர், புலம்பெயர்ந்த  தொழிலாளர்கள் என்றுள்ள ஒவ்வொரு பிரிவினரும் சொல்லொண்ணா துயருக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு உருப்படியான சமூகப் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு மறுக்கிறது. இந்த வஞ்சிக்கப்பட்ட பிரிவினரின் நலனுக்காக சிஐடியுவின் போராட்டம் தீவிரப்பட்டு வருகிறது.

தமிழகத்தில்...

பெரிய தொழிற்சாலைகளில் பணி நிரந்தரம் இல்லை, மிகைநேர ஊதியம் இல்லை, பண்டிகை விடுமுறையில்லை, மாறும் பஞ்சப்படி இல்லை என்ற நிலை. சீர்திருத்த தொழிற்சங்க தலைவர்கள் நிறுவாகத்தோடு கைகோர்த்து துரோக ஒப்பந்தங்களை போட்டனர். பேரவைக் கூட்டமோ, தொழிலாளர்களுக்கு ஒப்பந்தம்பற்றி எடுத்துரைத்ததோ இல்லை. இவை எல்லாம் தொழிலாளர் மத்தியில் பெரும் போராட்ட எழுச்சியை உண்டாக்கியது. இந்நிலையில் விம்கோ துப்பாக்கிச் சூடு, அரவங்காடு துப்பாக்கிச்சூடு, நெய்வேலி துப்பாக்கிச்சூடு, டெலிபிரிண்டர், ஆவடி டாங்க் தொழிற்சாலை, சிம்சன், சிம்கோ மீட்டர், எம்.ஆர்.எப், லேலண்டு, போக்குவரத்து, மின்சாரம், சர்க்கரை, பஞ்சாலை என்று அனைத்து பெரிய தொழிற்சாலைகளிலும் போராட்டங்கள் வெடித்தன.  இதேபோல்  பீடி, கைத்தறி, தேயிலை போன்ற பிரிவுகளில் பெரும் வேலை நிறுத்தங்கள் நடந்தன. கடும் அடக்குமுறைகள் ஏவப்பட்டன. தொழிலாளர் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று ஆட்சியாளர்கள் கொக்கரித்தனர். நமது அருமைத் தலைவர் வி.பி.சிந்தன் அவர்கள் சென்னையில் கத்திக்குத்துக்கு ஆளானதும் இந்தக் காலத்தில்தான்.

2007ம் ஆண்டு முதல் தமிழகம் போராட்டக் களமாக மாறியது தொழிற்சங்க உரிமை, தொழிற்சங்க அங்கீகாரம், கூட்டுபேர உரிமை போன்றவற்றிற்காக ஹூண்டாய், ஆர்க்கிட் கெமிக்கல்ஸ், ஃபோர்டு, தரணி சுகர்ஸ், சி.ஆர்.ஐ பம்பு. ஃபிக்கால், காஞ்சி கற்பூரம், பயனியர் கெமிக்கல், கெம்பிளாஸ்ட், ஜே.கே.டயர்ஸ், ராயல் என்பீல்டு, யமகா, ஃபாஸ்கான், நோக்கியோ, மீனாட்சி மருத்துவமனை, அசாஹி, மெட்ரோ ரயில், இ.சேவை மையம் போன்றவற்றில் இன்றளவிலும் நடைபெறும் தொடர் போராட்டங்கள்; அதே போன்று போக்குவரத்து, மின்சாரம், சேலம் ஸ்டீல், என்.எல்.சி, அங்கன்வாடி போன்றவற்றிலும் விசைத்தறி, கைத்தறி, கட்டுமானம், தோல், உள்ளாட்சி, ஆட்டோ, தையல், சுமைப்பணி, முந்திரி, மீன்பிடி, தோட்டம் போன்றவற்றில் நடைபெறும் போராட்டங்கள் சிஐடியுவின் மரியாதையை, செல்வாக்கை உயர்த்தியுள்ளன.

புதிய பரிமாணங்கள்

  1. கிராமப்புறத்து ஏழைமக்களான விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகளின் இயக்கத்தை வளர்த்தெடுக்க உணர்வுப்பூர்வமான ஈடுபாட்டை செலுத்தி தொழிலாளி-விவசாயி அணியை கட்டுவது.
  2. தொழிற்சங்க போராட்டங்களை சீர்குலைக்க ஆளும் வர்க்கங்கள் வேலையில்லா இளைஞர்களை கருவியாக பயன்படுத்தும் மோசடியை புரிந்துகொண்டு, வேலையில்லாத இளைஞர்களை திரட்டி வேலை கிடைக்க போராட வைப்பது.
  3. கூலி-பஞ்சப்படி, போனஸ் என்ற குறுகிய வட்டத்துக்கு அப்பால் சென்று, இன்றைய தொழிலாளர்களின் புதிய எதிர்ப்பார்ப்புகளை ஈடுசெய்ய வீட்டுவசதி, பயிற்சி, பதவிஉயர்வு, ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளில் கவனம் செலுத்துவது.
  4. சாதிய மோதல்களால் தொழிலாளர் வர்க்க ஒற்றுமை பாதிக்கப்படாமல் தடுத்து நிறுத்துவதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்கான கோரிக்கைகளை தொழிற்சங்க மேடையில் இருந்தே எதிரொலித்து வர்க்க ஒற்றுமையை பாதுகாப்பது.
  5. வகுப்புவாத, பிரிவினை சக்திகளின் தாக்குதல்களினால் நாடும், மக்கள் ஒற்றுமையும் கூறுபோடப்படும் அபாயத்தை தடுத்து நிறுத்தி நாட்டையும், வகுப்பு நல்லிணக்கத்தையும் நிலை நிறுத்துவது-

போன்றவை சிஐடியு முன்கை எடுத்து செயல்படுத்தி வரும் புதிய பரிமாணங்களில் சிலவாகும்.

அன்றாட போராட்டங்களின் அப்பால்...

தொழிலாளர்களின் உடனடி கோரிக்கைகளுக்கான அன்றாடப் போராட்டங்களை போர்க் குணத்துடனும், உறுதியோடும் நடத்துவதில் முன்னோடி தொழிற்சங்கமாக இந்திய தொழிலாளர் மத்தியில் நிலை பெற்று விட்டது சிஐடியு. ஆனால், இந்த அன்றாடப் போராட்டங்களுக்கு அப்பால் சென்று இன்றைய சுரண்டல் அமைப்புக்கு முற்றுபுள்ளிவைக்கும் புரட்சிகர சக்தியாக தொழிலாளி வர்க்கத்தை உருவாக்குவதும், சுரண்டலில் இருந்து விடுதலை பெற்று சோசலிசத்தை நிறுவ இடைவிடாது போராடுவதும் தொழிற்சங்க இயக்கத்தின் இன்றியமையாத கடமையாக ஏற்றுக்கொண்டுள்ளது சிஐடியு. இன்றைய சர்வதேச நிலையில் ஏகாதிபத்தியத்தையும், ஏகபோக முதலாளித்துவத்தையும் எதிர்த்துப் போராடும் உலகம் முழுவதிலும் உள்ள நமது வர்க்க சகோதரர்களுடன் கை கோர்த்து நின்று பாட்டாளி வர்க்க சர்வதேசிய ஒற்றுமைக்காக உரக்க குரல் கொடுத்து உணர்வுடன் செயலாற்றிவருவதும் சிஐடியு. இந்திய தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாம் சிஐடியுவை மேலும் வளர்ப்போம்-பலப்படுத்துவோம். மே-30 அமைப்பு தினத்தை உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்போம்!





 

;